ரேஷன் கடையை சூறையாடிய காட்டுயானைகள்

முதுமலையில் ரேஷன் கடையை காட்டுயானைகள் சூறையாடின. இதில் 216 கிலோ அரிசி நாசமானது.

Update: 2023-05-13 19:15 GMT

கூடலூர்

முதுமலையில் ரேஷன் கடையை காட்டுயானைகள் சூறையாடின. இதில் 216 கிலோ அரிசி நாசமானது.

ரேஷன் கடை

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வனத்துறையினர் மற்றும் ஆதிவாசி மக்களின் குடியிருப்புகள் உள்ளது. இவர்களுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கார்குடி பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இங்கு மாதந்தோறும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வன ஊழியர்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் வாங்கி வந்தனர்.

இதற்கிடையில் காட்டு யானைகள் இரவில் ரேஷன் கடையை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை தின்று சேதப்படுத்தி வந்தது. இதன் காரணமாக கார்குடியில் இருந்து தெப்பக்காடு சுற்றுலா பயணிகள் வரவேற்பு மையம் அருகே ரேஷன் கடை இடமாற்றம் செய்யப்பட்டது.

காட்டுயானைகள் முற்றுகை

இந்த நிலையில் நேற்று அதிகாலை தெப்பக்காடு ரேஷன் கடையையும் காட்டு யானைகள் முற்றுகையிட்டது. தொடர்ந்து கடை முன்பு இருந்த மண் எண்ணெய் பேரல்களை உருட்டி விட்டது. பின்னர் கடையின் இரும்பு கதவை உடைத்து உள்ளே இருந்த ரேஷன் அரிசி, கோதுமை மூட்டைகளை தூக்கி வெளியே வீசி சூறையாடியது. தொடர்ந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை காட்டுயானைகள் தின்றது. பின்னர் அங்கிருந்து சென்றது.

சோலார் மின்வேலி

இதையடுத்து காலையில் வழக்கம்போல் அப்பகுதிக்கு வந்த வன ஊழியர்கள் மற்றும் ஆதிவாசி மக்கள் ரேஷன் கடையில் பொருட்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது 216 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமை, உப்பு பாக்கெட்டுகள் காட்டு யானைகளால் நாசமானது தெரிய வந்தது. தொடர்ந்து வனத்துறையினர், வட்ட வழங்கல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காட்டு யானைகள் அட்டகாசத்தை தவிர்க்க சோலார் மின்வேலி பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்