மலை ரெயிலை வழிமறித்த காட்டு யானைகள்

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயிலை காட்டு யானைகள் வழிமறித்தன.

Update: 2023-01-24 18:45 GMT

குன்னூர், 

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயிலை காட்டு யானைகள் வழிமறித்தன.

மலை ரெயில்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக குட்டியுடன் கூடிய 9 காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இவை உணவு தேடி குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை மற்றும் மலை ரெயில் பாதையில் முகாமிடுவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு மலை ரெயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது ஹில்குரோவ் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் காட்டு யானைகள் முகாமிட்டு, மலை ரெயிலை வழிமறித்தன. இதனால் மலை ரெயில் சற்று தொலைவிற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. சுமார் ½ மணி நேரம் மலை ரெயில் பாதையில் யானைகள் நின்றன. பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றன. அதன் பின்னர் மலை ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும் சுற்றுலா பயணிகள் நிம்மதி அடைந்தனர். மலை ரெயிலை காட்டு யானைகள் வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

ஊருக்குள் புகுந்தன

கூடலூர் பகுதியில தேவர்சோலை அருகே 3 டிவிஷன் பகுதியில் நேற்று காலை 8 மணிக்கு காட்டு யானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து காட்டு யானைகள் தேயிலை தோட்டத்துக்குள் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து, தோட்டங்களில் இருந்து வெளியேறினர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்து சென்றது. பின்னர் கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இருப்பினும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் பயிர்களை தேடி ஊருக்குள் வரத் தொடங்கி உள்ளன. இதனால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை உள்ளது என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்