வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூர் அருகே வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

Update: 2023-09-03 21:30 GMT

கூடலூர்

கூடலூர் அருகே வாழைகளை காட்டு யானைகள் சேதப்படுத்தின.

காட்டு யானைகள்

கூடலூர், முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. யானைகள் உணவு தேடி ஊருக்குள் அடிக்கடி புகுந்து வருகிறது. இந்த சமயத்தில் பொதுமக்களின் வீடுகளையும், பயிர்களையும் சேதப்படுத்துகிறது. கூடலூர் அருகே அள்ளூர் வயல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் உள்ளனர். இவர்கள் வாழை உள்பட பல்வேறு விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் கூட்டம் அடிக்கடி அந்த பகுதியில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. பின்னர் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் நுழைந்து அதிகாலை வரை முகாமிட்டு வாழை உள்ளிட்ட பயிர்களை சாய்த்து போட்டு நாசம் செய்தது.

200 வாழைகள் சேதம்

இதில் வேணு உள்பட சில விவசாயிகள் பராமரித்து வந்த 200-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தது. இதனால் பொருளாதார ரீதியாக மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறினர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

காட்டு யானைகள் அடிக்கடி பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. தற்போது கூட்டமாக ஊருக்குள் வந்து வாழைகளை நாசம் செய்துள்ளது. இரவு நேரம் என்பதால் காட்டு யானைகளை விரட்ட முடியாமல் போனது.

இவ்வாறு பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்துவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வனத்துறையினர் வாழைகள் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்