விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டுயானைகள் மீண்டும் அட்டகாசம்
பூதப்பாண்டி அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் கூட்டம் மீண்டும் புகுந்து வாழைகளை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே விளைநிலங்களுக்குள் யானைகள் கூட்டம் மீண்டும் புகுந்து வாழைகளை நாசம் செய்தது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
பூதப்பாண்டி அருகே உள்ள தெள்ளாந்தி உடையார்கோணம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மலையடிவாரத்தில் உள்ள இந்த பகுதியில் அடிக்கடி யானைகள் கூட்டமாக வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வந்தன.
இதனை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யானைகள் வராமல் இருக்க அகழிகள், சோலார் மின்வேலி போன்றவற்றை வனத்துறையினர் அமைத்தனர். அதன்பிறகும் அவ்வப்போது யானைகளின் அட்டகாசம் இருந்தது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தோவாளை கால்வாய் பாலத்தின் குறுக்கே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டது. அதன் பிறகு யானைகளால் தடுப்புச்சுவரை தாண்டி வர முடியாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 11-ந் தேதி இரவு பாலத்தின் தடுப்புச்சுவரை இடித்து விட்டு யானை கூட்டம் வாழைத் தோட்டத்துக்குள் புகுந்தது. இதில் மணிகண்டன் என்ற விவசாயியின் வாழை தோட்டத்தை நாசமாக்கியது.
2-வது நாளாக...
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 2-வது நாளாக காட்டு யானைகள் அட்டகாசத்தில் ஈடுபட்டது. இந்த முறை தெள்ளாந்தி ஆனைக்கல் பகுதியில் உள்ள ரஜினிகாந்த் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்தை சேதப்படுத்தியது. இதனால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் கவலையில் உள்ளனர். எனவே யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டனர். பின்னர் அந்த பகுதியில் இருந்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
யானைகளை விரட்ட நடவடிக்கை
மேலும் யானைகள் விளைநிலங்களில் புகாதவாறு கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரை அகற்றிவிட்டு காங்கிரீட் சுவர் அமைக்கப்படும். ஆங்காங்கே அகழிகள் வெட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதுபற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், யானைகள் அட்டகாசத்தால் ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.