காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

Update: 2023-05-17 18:45 GMT

கோவை

கோவை வனக்கோட்டத்தில் காட்டு யானைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

காட்டு யானைகள்

கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன.

குறிப்பாக காட்டு யானைகள் அதிகளவில் காணப்படுகிறது. அவை அவ்வப்போது மலையோர கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. அவற்றை கண்காணிக்க வனத்துறையினர் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

இந்த நிலையில் இந்த ஆண்டில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணியை 3 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி கோவை வனக்கோட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலையில் பணி தொடங்கியது. வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள், யானை பாதுகாப்பு படையினர், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு காட்டு யானைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையத்தில் வனச்சரங்க அலுவலர் ஜோசப் ஸ்டாலின் தலைமையில் 5 குழுவினர் ஜக்கனாரி, கல்லாறு, கண்டியூர், சுண்டப்பட்டி, நெல்லிமலை ஆகிய வனப்பகுதிகளிலும், சிறுமுகையில் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் 6 குழுவினர் கூத்தாமண்டி வடக்கு, தெற்கு, குஞ்சப்பனை, பெத்திக்குட்டை, ஓடந்துறை, உளியூர் ஆகிய வனப்பகுதிகளிலும் கணக்கெடுப்பு நடந்தது.

இது குறித்து மாவட்ட வன அதிகாரி ஜெயராஜ் கூறியதாவது:-

3 முறைகள்

கோவை வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகள் கணக்கெடுக்கும் பணி 3 முறைகளில் நடந்து வருகிறது. இந்த பணியில் வனத்துறையினர் உள்பட 189 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று பிளாக் வாரியாக கணக்கெடுக்கும் பணி நடந்தது.

தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) ஒவ்வொரு பிளாக் பகுதியிலும் வரையறுக்கப்பட்ட பகுதியில் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று யானைகளின் சாணங்களை கண்டறிந்து மறைமுக கணக்கெடுப்பு முறை நடக்கும். நாளை (வெள்ளிக்கிழமை) நீர்நிலைகளில் கணக்கெடுக்கப்படுகிறது. இதில் கிடைக்கப்பெறும் யானைகள் குறித்த தகவல்கள் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்