அந்தியூர் வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் கண்ணில் சிக்கிய அழகிய வெளிநாட்டு பறவைகள்
அந்தியூர் வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் அழகிய வெளிநாட்டு பறவைகள் கண்ணில் சிக்கின.;
அந்தியூர்
அந்தியூர் வனப்பகுதியில் நடந்த கணக்கெடுப்பில் அழகிய வெளிநாட்டு பறவைகள் கண்ணில் சிக்கின.
பறவைகள் கணக்கெடுப்பு
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் வனப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நீண்ட தூரத்தில் இருக்கும் பறவைகளை கூட துல்லியாக காட்டும் தொலை நோக்கி கருவிகள், சென்சார் பதிவு கருவிகளை கொண்டு இந்த பணி நடைபெறுகிறது.
10 குழுக்கள்
அந்தியூர் வனப்பகுதியில் வனச்சரகர் உத்தரசாமி தலைமையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 10 குழுக்கள் பிரிக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று, பறவைகளை பார்த்து கணக்கெடுத்தார்கள். மரங்கள், புல்வெளிகள், குட்டைகள், ஏரிகள் என அனைத்து இடங்களிலும் தொலை நோக்கி மூலம் பார்த்தார்கள்.
இதில் பல அரியவகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கண்ணில் தென்பட்டன.
120 வகை
இதுபற்றி வனத்துறையினர் கூறும்போது, 'கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக வகையான பறவைகள் அந்தியூர் வனப்பகுதியில் காணப்படுகின்றன. குறிப்பாக பாம்பு உண்ணி கழுகு, தடித்த அழகு, மீன் கொத்தி வாத்து, மஞ்சள் மூக்கு, ஆள்காட்டி, தேன் பருந்து குக்குவால், இருவாச்சி, செந்நிலக்கொக்கு, மரகதப்புறா, செங்கால் நாரை, நீர்காகம், சைப்ரீஸ் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன.
இதில் 120 வகையான பறவைகள் வனப்பகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு காலை, மாலை என இருவேளைகளும் வருகின்றன. அவைகள் மீன்களை கொத்தி உண்கின்றன.
குஞ்சு பொரிக்க...
வெளிநாடுகளில் தற்போது கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் இனப்பெருக்கத்துக்காகவே பலவகை பறவைகள் வந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ள செங்கால் நாரைகள் அதிக அளவு காணப்படுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள வெப்பமும், குளிரும் குஞ்சு பொரிக்க ஏற்ற தட்ப வெட்ப நிலையில் உள்ளது. அதனால் வெளிநாட்டு பறவைகள் குஞ்சு பொரித்து, அவைகள் பறக்கும் நிலை வந்ததும் தங்களது நாடுகளுக்கு பறந்து சென்றுவிடும்' என்றார்கள்.
இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரும் கலந்துகொண்டார்கள்.