ஓடும் ரெயிலில் கணவன் கண் முன்னே மனைவி சாவு

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் கணவன் கண் முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-10-22 17:37 GMT

ஜார்கண்ட் மாநிலம் சிங்பூம் பகுதியை சேர்ந்தவர் சக்ரோ லோஹர் (வயது 45). இவரின் மனைவி மஞ்சரிசமத் (40). கணவன், மனைவி இருவரும் பெங்களூருவில் கட்டிட வேலை செய்து வந்தனர். மஞ்சரிசமத் திடீரென உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டார். இதனால் கணவன், மனைவி இருவரும் பெங்களூருவில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். அதற்காக அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகர் பகுதிக்கு செல்ல,  கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து ஜார்கண்ட் மாநிலம் ஹௌரா வரை செல்லும் ஹௌரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி பொதுப்பெட்டியில் அமர்ந்திருந்தனர்.

அந்த ரெயில் ஜோலார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தபோது, உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்ட மஞ்சரி சமத் திடீெரன மயங்கி விழுந்தார். தகவல் அறிந்ததும், டிக்கெட் பரிசோதகர் உடனே ஜோலார்பேட்டை ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். ஜோலார்பேட்டை ரெயில்வே டாக்டர் தயார் நிலையில் ரெயில் நிலையத்தில் இருந்தார். அந்த ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 5-வது நடைமேடையில் வந்து நின்றதும், மயக்க நிலையில் இருந்த மஞ்சரிசமத்தை பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பெண்ணின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் ரெயிலில் கணவன் கண் முன்னே மனைவி உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்