மாவட்டத்தில் பரவலாக மழை

மாவட்டத்தில் பரவலாகமழை பெய்தது. இதனால் நீர்வரத்து பாதைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

Update: 2022-10-13 19:32 GMT

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து பாதைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

வத்திராயிருப்பு

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் ஓடைகளான மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

3 அடி உயர்வு

வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர்மழையினால் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 38.39 அடியாக உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ராஜபாளையம்

ராஜபாளையத்தில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 4 மணி நேரம் கன மழை பெய்தது. அதேபோல நகர் மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலை, அய்யனார் கோவில் ஆற்றுப்பகுதியில் உள்ள நீராவி, முள்ளிக்கடவு, மாவரசியம்மன் கோவில் உள்ளிட்ட பீட்டுகளிலும் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்துள்ளது. இதனால் மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

இதனை தொடர்ந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம், நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. முடங்கியாற்றில் நீர் நிறைந்து செல்வதால், மருங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், புதுக்குளம், பிரண்டை குளம் உள்ளிட்ட கண்மாய்களுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கன மழை காரணமாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மழை நீர் குளம் போல தேங்கி இருந்தது. அதேபோல தென்காசி - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் பல்வேறு இடங்களில் மழை நீர்தேங்கி நின்றது. அதேபோல தளவாய்புரம், சத்திரப்பட்டி, முகவூர், சேத்தூர், தேவதானம், சொக்கநாதன் புத்தூர், புத்தூர் மற்றும அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. திரவுபதி அம்மன் கோவில் தெரு, ஆத்துக்கடை போன்ற பகுதிகளில் வீடுகளுக்குள் கழிவு நீர் சென்றது. இதனை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பேயனாற்று ஓடை மற்றும் மீன் வெட்டி அருவிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் செண்பகத்தோப்பு வனப்பகுதிகளுக்குள் வனத்துறையினர் யாரையும் அனுமதிக்கவில்லை.

ஆலங்குளம்

ஆலங்குளம் பகுதியில் நேற்று அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆலங்குளம், சங்கரமூர்த்திபட்டி, ராசாப்பட்டி, சுண்டங்குளம், லட்சுமியாபுரம், கீழாண்மறைநாடு, கரிசல்குளம், கொங்கன்குளம், புளியடிபட்டி, வலையபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் சிறிய குட்டைகள், ஊருணிகளில் தண்ணீர் பெருகியது.

காய்ந்து போன மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிர்களுக்கு இந்த மழை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்