குமரியில் பரவலாக மழை
குமரியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக இரணியலில் 22 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வருகிறது.
நாகர்கோவில்,
குமரியில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக இரணியலில் 22 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வருகிறது.
மழை
சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள மாவட்டங்களை மிரட்டிய மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.
குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன், ஜில்லென்ற சீதோஷ்ண நிலையுடன் காட்சி அளித்தது. நேற்று முன்தினம் லேசாக வெயில் முகம் காணப்பட்டது. இருப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
இரணியலில் 22 மி.மீ. பதிவு
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டப் பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பூதப்பாண்டி- 1.6, களியல்- 5.4, கன்னிமார்- 1.4, குழித்துறை- 7.8, நாகர்கோவில்- 6.6, சுருளக்கோடு-5, தக்கலை- 13.2, குளச்சல்- 18.4, இரணியல்- 22, பாலமோர்- 8.4, மாம்பழத்துறையாறு அணை- 17.2, திற்பரப்பு- 5.4, ஆரல்வாய்மொழி- 1, அடையாமடை- 7.4, குருந்தங்கோடு- 2.8, முள்ளங்கினாவிளை- 12.8, ஆனைக்கிடங்கு- 16 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
அணைகளுக்கு தண்ணீர் வரத்து
பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 775 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 195 கன அடி தண்ணீரும், சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 30 கன அடி தண்ணீரும், சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 45 கன அடி தண்ணீரும், முக்கடல் அணைக்கு 8.6 கன அடி தண்ணீரும் வருகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 788 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீரும், முக்கடல் அணையில் இருந்து குடிநீருக்காக 8.6 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
திற்பரப்பு அருவியில் நேற்று 2-வது நாளாக குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.