இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர் பாசம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது கண்ணை மூடிக் கொண்டா இருந்தீர்கள் என்றும், இஸ்லாமிய சிறைவாசிகள் மீது திடீர் பாசம் ஏன்? என்று எடப்பாடி பழனிசாமிக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். அவையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

Update: 2023-10-10 23:15 GMT

எடப்பாடி பழனிசாமி

சட்டசபையில் இஸ்லாமிய சிறைவாசிகளை முன் விடுதலை தொடர்பான சிறப்பு கவன தீர்மானத்தில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர், '1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில் பலர் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 16 பேர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர், 20 பேர் பல்வேறு சமூக குற்ற வழக்குகளில் சிறையில் உள்ளனர். ஆக மொத்தம் 36 இஸ்லாமியர்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் 15-11-2021 அன்று போடப்பட்ட அரசாணையால் இவர்கள் முன் விடுதலை ஆவது தடைப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் கூறுகின்றனர்.

இவர்களில் ஒரு சிலர் சிறையிலேயே உயிரிழந்துள்ளனர். 20 முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் 36 இஸ்லாமிய சிறைவாசிகளின் வயது மூப்பு உடல்நலக்குறைவு, குடும்ப வேண்டுகோள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமாறு வலியுறுத்துகிறேன்' என்றார்.

ஆயுள் சிறை கைதிகள்

அதனைத்தொடர்ந்து, கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டு சிறைவாசிகளில் 10 ஆண்டுகள் மற்றும் 20 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகள், வயது முதிர்ந்த சிறைவாசிகள், பல்வேறு இணை நோய்கள் இருக்கக்கூடிய உடல்நலம் குன்றிய சிறைவாசிகள் ஆகியோரின் நிலையை மனிதாபிமான அடிப்படையில் கருத்தில் கொண்டு ஆராய வேண்டும் என்பதற்காகத்தான், ஓய்வுபெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையின் கீழ் 6 பேர் அடங்கிய ஒரு குழு 22.12.2021-ல் இந்த அரசால் அமைக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மற்றும் இதுதொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில், இவர்களின் வழக்குகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரிய பரிந்துரை வழங்க ஏதுவாகவும் இக்குழு அரசால் அமைக்கப்பட்டது. இந்தக்குழு தன்னுடைய அறிக்கையை 28.10.2022 அன்று அரசுக்கு அளித்தது. அந்த அறிக்கையில் 264 ஆயுள்தண்டனை சிறைவாசிகள் மட்டுமே குழுவால் முன்விடுதலைக்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

கவர்னர் ஒப்புதல் பெற்றதும்....

அதன் அடிப்படையில் அண்ணாவின் 115-வது பிறந்த நாளினை முன்னிட்டு, "ஆயுள் தண்டனை சிறைவாசிகளை முன்விடுதலை செய்வதற்கு பரிசீலனை செய்யும் பொருட்டு'' 11-8-2023 அன்று முதற்கட்டமாக தகுதியுள்ள 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் அரசால் பரிசீலனை செய்யப்பட்டு, தொடர்புடைய கோப்புகள் 24.8.2023 அன்று கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளன.

அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவார்கள். கவர்னர் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள். நீதிபதி ஆதிநாதன் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட மீதமுள்ள ஆயுள் தண்டனை சிறைக்கைதிகள் விடுதலை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும்.

தமிழக அரசின் சார்பில், நான் 13.9.2021-ல் அறிவித்தவாறு, அண்ணா 113-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறையில் நீண்ட கால சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகளின் தண்டனையை குறைத்து நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமானம் அடிப்படையில் குறைத்து முன் விடுதலை செய்ய உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்

அதேபோல், அறிவுரை கழக திட்டத்தின்கீழ் 14 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும், மருத்துவ காரணங்கள் மற்றும் நீதிமன்ற ஆணைகளின்படி 15 ஆயுள் தண்டனை சிறைவாசிகளும் ஏற்கனவே முன்விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில், 566 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் நேர்வுகள் பரிசீலனை செய்யப்பட்டு, 8.10.2023 வரை 335 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 9 பேர் இஸ்லாமிய சிறைவாசிகள் ஆவார்கள்.

இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை, அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்த பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் சட்டரீதியாக முறைப்படி தமிழ்நாடு அரசு உரிய வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதை இந்த அவைக்கு நான் தங்கள் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்.

கண்ணை மூடிக்கொண்டு இருந்தீர்களா?

இங்கே எதிர்க்கட்சித்தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்த பிரச்சினை குறித்து எடுத்து பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை பற்றி அ.தி.மு.க. பேசுவதால், நான் அவர்களை பார்த்து ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்?, அதை நான் இப்போது அறிய விரும்புகிறேன்.

தர்மபுரியில் பஸ்சில் பயணித்த மாணவிகளை உயிரோடு பட்டப்பகலில் எரித்தவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்விடுதலை செய்த உங்களுடைய ஆட்சியில், ஏன் இஸ்லாமிய சிறைவாசிகளை முன்விடுதலை செய்ய ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை என்பதுதான், ஆணவத்தோடு அல்ல, அடக்கத்தோடு நான் கேட்க விரும்புகிற கேள்வி.

ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை பற்றி துளியும் நடவடிக்கை எடுக்காமல், அதுமட்டுமல்ல; குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு எல்லாவற்றையும் கண்மூடி ஆதரித்த அ.தி.மு.க., இப்போது இஸ்லாமிய சிறைவாசிகள் மீது காட்டக்கூடிய திடீர் பாசம் ஏன்? என்று இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும். எங்களுக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மை சகோதர, சகோதரிகளுக்கு மிக நன்றாகவே தெரியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைதி பூங்கா

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவர் எழுந்து தன்னை பேச அனுமதிக்கும்படி சபாநாயகரிடம் கோரினார். அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்று சிறையில் நீண்ட காலமாக இருந்த 7 தமிழர்களை விடுவிக்க காரணமாக இருந்தது அ.தி.மு.க. அரசு.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- அதுவும் தி.மு.க. ஆட்சியில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமி:- 7 பேர் விடுதலைக்காக அ.தி.மு.க. போராட்டம் நடத்தியது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில் தமிழகம் அமைதி பூங்காவாக இருந்தது. இவ்வாறு குறிப்பிட்டு விட்டு தனது இருக்கையில் எடப்பாடி பழனிசாமி அமர்ந்தார்.

அதனை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வ பெருந்தகையை சபாநாயகர் பேச அழைத்தார்.

கூச்சல், குழப்பம்

செல்வப்பெருந்தகை பேச எழுந்தபோது, எடப்பாடி பழனிசாமி மீண்டும் தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு சபாநாயகர், நீங்கள் இப்போது தான் பேசி விட்டு அமர்ந்தீர்கள். எனவே செல்வ பெருந்தகை பேசிய பிறகு வாய்ப்பு தருகிறேன் என்றார்.

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி எழுந்து நின்று தன்னை பேச அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று சத்தமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

சபாநாயகர்:- நீங்கள் பேசி விட்டீர்கள். இருப்பினும் வாய்ப்பு தருகிறேன் என்று சொல்கிறேன். ஆனாலும் இதுபோன்று நீங்கள் நடந்து கொள்ளலாமா?.

எடப்பாடி பழனிசாமி:- இஸ்லாமியர்களுக்கு நாங்கள் எதையும் செய்யவில்லை என்பதுபோல் முதல்-அமைச்சர் பேசுகிறார். அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டாமா?. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி தான் நடந்தது.

சபாநாயகர்:- நீங்கள் தீர்மானத்தில் பேசுங்கள்.

அ.தி.மு.க. வெளிநடப்பு

அப்போது எடப்பாடி பழனிசாமி சில வார்த்தைகளை குறிப்பிட்டார். அப்போது மைக் தரப்படாததால் பதிவாகவில்லை. தொடர்ந்து எழுந்து நின்று பேசிக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து அவையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- இஸ்லாமியர்கள் மீது எந்த அளவுக்கு அவர்கள் அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.

சபாநாயகர்:- அவர்கள் பேசி விட்டு அமர்ந்த பிறகும் நான் அவர்களுக்கு வாய்ப்பு தருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் இதுபோன்று நடந்துகொள்வது முறையா? மக்கள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் நடந்து கொண்ட ஜனநாயக முறை சரிதானா?

இவ்வாறு விவாதம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்