சூறைக்காற்றுடன் திடீர் மழை ஏன்?

அதிகபட்சமாக வேப்பூரில் 75 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சூறைக்காற்றுடன் திடீரென மழை பெய்தது ஏன்? என்பது குறித்து வானிலை மைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-06-06 18:45 GMT

கடலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென் மேற்கு பருவ மழை தொடங்க தாமதம் ஏற்பட்டு வருவதால், வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அதற்கேற்ப வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. இதற்கிடையில் கடலூரில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறைக்காற்றில் வாழை மரங்கள் முறிந்தும், சாய்ந்தும் விழுந்து சேதமடைந்தது. மரங்களும் வேரோடு சாய்ந்தது. சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மழை அளவு

பண்ருட்டி, விருத்தாசலம், வடக்குத்து, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, அண்ணாமலைநகர், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஆனால் நேற்று மழை இல்லை. காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. இருப்பினும் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேப்பூரில் 75 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 13.13 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பண்ருட்டி - 71

கீழசெருவாய் - 36

லக்கூர் - 19.4

கலெக்டர் அலுவலகம் - 18

கடலூர் -16.4

குப்பநத்தம் -12.8

மே.மாத்தூர் - 12

வானமாதேவி - 11.2

பெலாந்துறை - 9.6

விருத்தாசலம் - 9

வடக்குத்து - 8.3

குடிதாங்கி - 6

காட்டுமயிலூர் - 5

தொழுதூர் - 4

கொத்தவாச்சேரி - 3

குறிஞ்சிப்பாடி - 3

பரங்கிப்பேட்டை - 2.8

அண்ணாமலைநகர் -2.2

புவனகிரி -2

சிதம்பரம் - 1.6

சூறைக்காற்றுடன் திடீர் மழை ஏன்?

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் ஏற்பட்ட வெப்பச்சலனம் காரணமாக திடீரென மழை பெய்தது. கிழக்கில் இருந்து வந்த ஈரப்பத காற்றும் சரியான நேரத்திற்கு உள்ளே வந்ததால், வானிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்தது. வழக்கமாக வெப்பம் அதிகமாக இருக்கும் போது மழை பெய்தால் காற்று, இடி, மின்னல் அதிகமாக தான் இருக்கும்.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்னும் தொடங்கவில்லை. இன்னும் வறண்ட காற்று தான் வீசி வருகிறது. தென் மேற்கு பருவ மழை பெய்தால் தான் தமிழகத்தில் வெப்பம் குறையும். இன்னும் ஓரிரு நாட்களுக்கு இதே நிலை தான் நீடிக்கும் என்று கடலூர் வானிலை மைய அதிகாரி பாலமுருகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்