பேரூராட்சி திருமண மண்டபம் பயன்பாட்டிற்கு விடப்படாதது ஏன்?

மல்லாங்கிணற்றில் உள்ள திருமண மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-06-11 20:44 GMT


மல்லாங்கிணற்றில் உள்ள திருமண மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமண மண்டபம்

மல்லாங்கிணறு பேரூராட்சியின் சார்பில் கடந்த 1997-ம் ஆண்டு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருமண மண்டபம் கட்டப்பட்டது. இந்த திருமண மண்டபத்திற்கு சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகையாக ரூ.3 ஆயிரம் பெறப்பட்டு வந்தது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இது பொது மக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டு வந்தது. இந்தநிலையில் திடீரென கடந்த 2 ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம் இந்த திருமண மண்டபத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு விடுவதை நிறுத்திவிட்டது. திருமண மண்டபத்தில் தண்ணீர் வசதி இல்லை என காரணம் கூறப்படுகிறது. ஏற்கனவே போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லை என்றால் அதனை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயன்படுத்த நடவடிக்கை

திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுப்பவர்கள் லாரிகளில் தண்ணீர் விலைக்கு வாங்கி திருமண மண்டபத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏற்றிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

தனியார் திருமண மண்டபங்களில் வாடகை பல மடங்கு அதிகமாக உள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே பேரூராட்சி நிர்வாகம் கடந்த காலங்களை போல பேரூராட்சி திருமண மண்டபத்தை பொதுமக்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபத்தில் தேவைப்படும் வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்