பட்டமளிப்பு விழா தாமதம் ஏன்..? அமைச்சர் பொன்முடி பதில்

பட்டமளிப்பு விழா காலதாமதத்திற்கான காரணத்தை அமைச்சர் பொன்முடி விளக்கியுள்ளார்.

Update: 2023-06-08 07:40 GMT

சென்னை,

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது;

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடைந்தது, அதற்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. சென்ற ஆண்டை விட இந்தாண்டு 18,510 பேர் அதிகம் விண்ணப்பித்து உள்ளனர்.

நீட் தேர்வு முடிவுகள் வந்தபிறகு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கும். ஜூலை 2ந்தேதியில் இருந்து கவுன்சிலிங் தொடங்க உள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரவும் மாணவர்களிடையே ஆர்வம் உள்ளது.

பல்கலை. பட்டமளிப்பு விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக ஒன்றிய அமைச்சர்களை அழைத்து வர வேண்டும் என கவர்னர் விரும்புகிறார். தமிழ்நாட்டில் உள்ள தமிழறிஞர்கள், முன்னாள் துணைவேந்தர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க கவர்னர் விரும்புவதில்லை. இதன் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது. கல்லூரி படிப்பை முடித்த 9.29 லட்சம் மாணவர்கள் பட்டம் பெற முடியாமல் காத்திருக்கின்றனர். இதற்கு காரணம் தமிழக அரசு கிடையாது.

கோவை பாரதியார் பல்கலை. துணை வேந்தரை தேர்வு செய்ய மூவர் குழுவை கடந்தாண்டு அக்டோபரிலேயே அரசு அமைத்தது. ஆனால், யு.ஜி.சி. சார்பில் பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என கவர்னர் நிர்பந்திக்கிறார்; அப்படி ஒரு விதியே இல்லை

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழு இன்னும் அமைக்கப்படவில்லை என கவர்னர் ரவி கூறியிருப்பது முற்றிலும் தவறான ஒன்று; கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே சட்டப்படியான 3 பேர் குழு அமைக்கப்பட்டுவிட்டது.

கவர்னர் எந்த தேதி கேட்டாலும், அதை நாங்கள் கொடுக்கிறோம். அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு கவர்னர் முன்வர வேண்டும். அதற்கு உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.

 

 

Tags:    

மேலும் செய்திகள்