சமூக நீதி பேசும் திமுக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

மதுவை பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-26 10:12 GMT

தர்மபுரி,

தர்மபுரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் உள்ளிட்ட நிலுவையில் உள்ள நீர்பாசன திட்டங்களை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். தர்மபுரியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைவிடத்தில் தார்சாலை ஒன்று மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளது. எவ்வித தொழிற்சாலைகளும் இதுவரை வரவில்லை. விவசாய விளை நிலங்களை அழித்து அங்கு தொழிற்சாலைகள் அமைத்து ஏற்படும் வளர்ச்சி தேவையில்லை.

மதுவை டெட்ரா பாக்கெட்டுகளில் விற்பனை செய்யும் தமிழக அரசின் முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மதுக்கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று திமுக அறிவித்தது. ஆனால் இதுவரையில் இதை செயல்படுத்தவில்லை. தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 75 சதவீதமாக இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது. ஆனால் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என தெரிவித்துள்ளது. தொடர்ந்து சமூக நீதி குறித்து பேசிவரும் திமுக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் தயங்குகிறது?.

ஆவின் பால் விற்பனை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானது எனில் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனியார் பால் கொள்முதலில் தொடர்ந்து ஊழல் நடைபெற்று வருகிறது. இதை அரசு உடனடியாக தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்