முளைப்பாரி தொட்டியில் விஷவாயு உருவானது ஏன்?

கோட்டைக்குளம் அருகே கட்டப்பட்டு உள்ள முளைப்பாரி தொட்டியில் விஷவாயு உருவானது ஏன்? என்று, திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் காரசார விவாதம் நடந்தது.

Update: 2023-02-28 13:44 GMT

மாநகராட்சி கூட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம், மேயர் இளமதி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் ராஜப்பா முன்னிலை வகித்தார். இதில் ஆணையர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கை புறநகர் பஸ் நிலையமாக மாற்றுதல் உள்பட மொத்தம் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

தனபாலன் (பா.ஜனதா) :- கோட்டை மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள சாலையின் இருபக்கங்களிலும் கடைகள் அமைக்கப்படுவதால் நெரிசல் ஏற்படுகிறது. அக்னி சட்டி எடுத்து செல்லும் பக்தர்கள் சிரமப்படுவதால், அடுத்தமுறை கடைகள் அமைப்பதை தடுக்க வேண்டும். குமரன்பூங்கா முன்பு உள்ள இடத்தில் கடைகள் அமைக்கலாம்.

ஜோதிபாசு (மா.கம்யூ) :- கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வாகனங்களை நிறுத்துவதற்கு வழங்கப்படும் நேருஜி பள்ளி வளாகத்தை, திருவிழா முடிந்ததும் சுத்தம் செய்து வழங்க வேண்டும்.

துணை மேயர்:- பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்களின் தரப்பில் இருந்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை. எனினும் பரிசீலனை செய்யப்படும்.

மேயர்:- பக்தர்களுக்கு சிரமம் இல்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அடிப்படை வசதிகள்

கணேசன் (மா.கம்யூ) :- தாடிக்கொம்பு சாலையில் பாலதிருப்பதி பகுதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன. நெடுஞ்சாலையாக இருப்பதால் பள்ளி, அங்கன்வாடி மையத்தை ஆர்.எம்.காலனிக்கு மாற்ற வேண்டும்.

ராஜ்மோகன் (அ.தி.மு.க.) :- எனது வார்டுக்கு நிதி ஒதுக்கி பணிகள் மேற்கொள்ள வேண்டும். மின்மயானம் அருகே உள்ள சுகாதார வளாகத்தை பராமரிக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்தை மீதமுள்ள வார்டுகளுக்கு கொண்டு வரவேண்டும்.

துணை மேயர்:- உங்கள் வார்டு மிகவும் அருமையாக இருக்கிறது. எனினும் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேயர்:- மாநகராட்சியின் 48 வார்டுகளுக்கும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி கேட்டு இருக்கிறோம். நிதி வந்ததும் அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.

கணேசன் (மா.கம்யூ) :- ஆத்தூர் காமராஜர் அணையில் இயக்கப்படாமல் உள்ள ஜெனரேட்டரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விஷவாயு உருவானது ஏன்?

ஜோதிபாசு (மா.கம்யூ) :- கோட்டைகுளத்தின் அருகேயுள்ள தொட்டியில் ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை கரைத்ததால் விஷவாயு உருவாகி, உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே விநாயகர் சிலைகளை இனிமேல் ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தனபாலன் (பா.ஜனதா) :- விநாயகர் சிலைகள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரையின்படி ரசாயனம் கலக்காமல் தயாரிக்கப்படுகிறது. முளைப்பாரி, சிலைகளை கரைக்கவே தனியாக தொட்டி கட்டப்பட்டது. நகருக்குள் அவருடைய வார்டில் இருந்து ஆற்றை வெட்டி கொண்டு வந்தால் அதில் கரைக்கலாம். அண்ணாநகரில் குடியிருப்புக்கு நடுவே அமைந்துள்ள உரப்பூங்காவை மாற்ற வேண்டும்.

துணை மேயர்:- அ.தி.மு.க. காலத்தில் கோட்டைக்குளத்தின் அருகே கட்டப்பட்டுள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேற வசதி இல்லை. இதனால் தண்ணீரும், கழிவுகளும் சேர்ந்து விஷவாயு உருவாகி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தொட்டியை முறையாக கட்டி இருந்தால் உயிர்ப்பலி ஏற்பட்டு இருக்காது. எனவே தண்ணீர் வெளியேறும் வகையில் தொட்டி மாற்றி அமைக்கப்படும்.

ராஜ்மோகன் (அ.தி.மு.க.) :- அ.தி.மு.க. ஆட்சியில் கோட்டைக்குளத்தை பாதுகாக்க தொட்டி கட்டப்பட்டது. அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கினாலும், அதற்கு திட்டமதிப்பீடு தயாரித்து கட்டியது அதிகாரிகள் தானே. எனவே அ.தி.மு.க. ஆட்சியை குறைக்கூறுவது சரியல்ல.

துணைமேயர்:- தொட்டியை அதிகாரிகள் கட்டினாலும் அதை முறையாக கண்காணித்து இருக்க வேண்டும்.

மேற்கண்டவாறு விவாதம் நடைபெற்றது.

பேனர்

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கவுன்சிலர் ஜோதிபாசு, அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட கழிப்பறை தற்போது பயன்பாட்டில் இல்லை என்பதை குறிக்கும் வகையில், காணாமல் போன கழிப்பறை என்று அச்சிட்ட பேனருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்