1974-ல் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்போது ஏன் கிளப்புகிறார்? ப.சிதம்பரம் கேள்வி

6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-01 05:04 GMT

சென்னை,

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அந்த ஆவணங்களை அண்ணாமலை வெளியிட்டு, கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதற்கு காங்கிரஸ், தி.மு.க.தான் முக்கிய காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேபோல், பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கச்சத்தீவு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதற்கு தி.மு.க. எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவு பற்றிய புதிய விவரங்கள் வெளிப்பட்டுவருவதனால் முற்றிலும் இரட்டை நிலைப்பாட்டை கொண்ட தி.மு.க.வின் வேடம் கலைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

"1974ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி

மோடி செய்தது என்ன? 2,000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார்

மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1,000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

Tags:    

மேலும் செய்திகள்