டெல்லி செங்கோட்டையில் யார் தேசியக்கொடி ஏற்றினாலும் தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சி தான் - கே.எஸ்.அழகிரி

செங்கோட்டையில் யார் தேசியக் கொடி ஏற்றினாலும் தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சி தான் என்று சுதந்திர தினவிழாவின் போது கே.எஸ்.அழகிரி பேசினார்.

Update: 2022-08-15 16:15 GMT

சென்னை,

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது,

டெல்லி செங்கோட்டையில் யார் தேசியக் கொடி ஏற்றினாலும் தேசியவாதிகளுக்கு மகிழ்ச்சி தான். ஏனென்றால் தேசியக் கொடியேற்றும் உரிமையை நாம் தான் பெற்றுக் கொடுத்துள்ளோம். சுதந்திரத்திற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்று புலம்பக் கூடாது.

ஏனென்றால், நம்மிடம் தான் மக்கள் சுதந்திரத்தை தந்தார்கள். இன்று அவர்கள்தேசியக் கொடியை ஏற்றுகிறார்கள் என்றால் நாம் தான் அவர்களிடம் கொடுத்து விட்டோம். இந்த அதிகாரம் ஏன் கைமாறியது என்று நடுநிலையாக நாம் யோசிக்க வேண்டும். நமது செயல்பாட்டில் தவறில்லை. ஆனால், நமது காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கான திட்டத்தில் தான் நாம் தவறு செய்துவிட்டோம். அந்த தவறை ராகுல் காந்தி சரி செய்து வருகிறார்.

இந்தியாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நமது மாநிலத்தின் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ராகுல் காந்தி தொடங்குகிறார். 3 நாட்கள் தமிழகத்தில் இருக்கிறார். பாதயாத்திரைக்கான ஏற்பாடுகளை மற்ற மாநிலங்களை விட நாம் சிறப்பாக செய்ய வேண்டும்.

இந்தியாவின் பன்முக தன்மையை காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸ் அனைத்து நிறத்தையும் உள்ளே அழைக்கிறது. ஆர்.எஸ்.எஸ். ஒரே நிறம் தான் வேண்டும் என்று நினைக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்