செந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது? தலைமை நீதிபதியிடம் முறையிட ஐகோர்ட்டு உத்தரவு

அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த கோர்ட்டு விசாரிப்பது என்ற விவகாரத்தில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிட டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Update: 2023-08-31 18:11 GMT

அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன் 14-ந்தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை வழக்கில் கைது செய்தனர். அப்போது செந்தில்பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்து விட்டதால் வழக்கு விசாரணை முதன்மை செசன்சு கோர்ட்டில் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பில் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மனுவை விசாரிக்க மறுத்த சிறப்பு கோர்ட்டு நீதிபதி, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதுகுறித்து மாவட்ட செசன்சு கோர்ட்டில் முறையிட்டபோது, சிறப்பு கோர்ட்டில்தான் ஜாமீன் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டை அணுகுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.

இதனையடுத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில், செந்தில்பாலாஜி தரப்பு மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ நேற்று முறையிட்டார்.

அதற்கு நீதிபதி எம்.சுந்தர், ''ஏற்கனவே செந்தில்பாலாஜி வழக்கை விசாரிக்க நீதிபதி ஆர்.சக்திவேல் மறுத்து விட்ட நிலையில், மீண்டும் எங்கள் அமர்வில் எப்படி அந்த வழக்கு தொடர்பாக முறையிட முடியும்?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த மூத்த வக்கீல், ''இந்த விவகாரத்தில் எந்த கோர்ட்டு ஜாமீன் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாலே போதுமானது'' என்று பதில் அளித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி எம்.சுந்தர், ''எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். அதனால், ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள்'' என்று கூறினார்.

ஆனால் தலைமை நீதிபதி தற்போது ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். அவர் அடுத்த வாரம்தான் சென்னை வருகிறார். இதனால் ஐகோர்ட்டு மதுரை கிளையில் உள்ள தலைமை நீதிபதியிடம் முறையிடலாமா? அல்லது சென்னை ஐகோர்ட்டில் மூத்த நீதிபதிகள் அமர்வில் முறையிடலாமா? என்று செந்தில்பாலாஜி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்