தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என வேளாண்மை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூர்
வெள்ளை ஈ தாக்குதல்
பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி வட்டாரத்தில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. தொடர்ந்து வறண்ட வெப்பநிலை நிலவுவதால் இந்த பூச்சியின் தாக்குதல் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ மேலாண்மை தொழில்நுட்ப முறைகளை கடைப்பிடித்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.
வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிறமுள்ள நீள்வட்ட முட்டைகளை ஓலைகளில் அடிப்பகுதியில் இடும். மெழுகு பூச்சுடன் காணப்படும் முட்டைகளிலிருந்து வெளிப்படும் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ந்த ஈக்கள் ஓலைகளில் அடிப்பகுதியில் இருந்து சாற்றை உறிஞ்சும். இவை வெளியேற்றும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட ஓலைகளில் இருந்து படியும். அதன் மேல் கேப்னோடியம் என்ற கரும்பூஞ்சனம் படுகிறது.
பூச்சியை கட்டுப்படுத்தலாம்
இதனால் ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. இதுபோன்ற அறிகுறிகளை கண்டவுடன் மஞ்சள் நிறமுடைய பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை 5 அடிக்கு ஒன்றரை அடி என்ற அளவில் ஏக்கருக்கு 10 என்ற எண்ணிக்கையில் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டு வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். விளக்கு பொறிகள் ஏக்கருக்கு 2 வீதம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் ஒளிரச் செய்ய வேண்டும். பூச்சிகளின் வளர்ச்சியை தடுக்க ஓலைகளின் அடிப்பகுதியில் தண்ணீரை வேகமாக பீச்சி அடித்து கட்டுப்படுத்தலாம்.
கிரைசோபெர்லா என்னும் இரை விழுங்கிகளை ஏக்கருக்கு 400 எண்கள் என்ற அளவில் விட்டும் கட்டுப்படுத்தலாம். வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாகும்போது பொறிவண்டுகள் போன்ற இயற்கையான இரை விழுங்கிகள் அதிக அளவில் தோன்றும். தென்னந்தோப்புகளில் மரத்தை சுற்றி மஞ்சள் வண்ண பூக்கள் பூக்கும் தட்டைப் பயறு, சாமந்தி, சூரியகாந்தி போன்ற பயிர்களை பயிர் செய்து இயற்கை எதிரிகளை உருவாக்கியும் இப்பூச்சியை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.