கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க பணி நிறைவு பெறுவது எப்போது?

கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் எப்போது நிறைவு பெறும் என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2022-10-30 18:45 GMT

கூடலூர்,

கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க பணி தாமதமாக நடைபெற்று வருகிறது. இதனால் எப்போது நிறைவு பெறும் என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

பஸ் நிலையம்

கேரளா-கர்நாடகா உள்பட வெளிமாநில பயணிகளை வரவேற்கும் மையமாகவும், தமிழகம்-கர்நாடகா மற்றும் கேரளா என 3 மாநிலங்களை இணைக்கும் நகரமாகவும் கூடலூர் திகழ்கிறது. இதேபோல் 3 மாநில சாலைகள் இணையும் இடத்தில் கடந்த 1979-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு தமிழக பஸ்கள் மட்டுமின்றி வெளிமாநில பஸ்களும் வந்து செல்கிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர்.

இதுதவிர கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினரும் மருத்துவம், வணிகம் சார்ந்த அடிப்படை பணிகளுக்காக தினமும் வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்புகின்றனர். தொடக்க காலத்தில் கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை மூலம் 18 பஸ்கள் இயக்கப்பட்டது. நாளடைவில் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, தற்போது 50 பஸ்கள் இயக்கப்படுகிறது.

போதிய இடவசதி இல்லை

ஆனால், எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் ஊட்டி, மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பஸ்கள் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் வெளியூர் செல்வதற்காக வரும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளும் கிடையாது.

இதன் காரணமாக புதிய பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டு பஸ் நிலையத்தின் பின்புறம் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.4.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது.

போக்குவரத்து பணிமனை

தொடர்ந்து பழைய கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. தற்போது பஸ் நிலையத்தின் பின்புறம் போக்குவரத்து பணிமனை கட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் இன்னும் முழுமை பெறாமல் உள்ளது. இதனால் தொடர் மழை மற்றும் பனி, வெயிலில் பயணிகள் பொதுமக்கள் நின்று சிரமப்படுகின்றனர். 2 ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் பஸ் நிலைய விரிவாக்க பணி எப்போது நிறைவு பெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

முதியவர்கள் கடும் சிரமம்

கூடலூர் துப்புகுட்டிபேட்டை தட்சிணாமூர்த்தி:-

கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க கட்டுமான பணி நடைபெறுவது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. ஆனால் தினமும் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பணியை விரைவுபடுத்த வேண்டும். கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள், முதியோர் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதேபோல் பள்ளி மாணவ-மாணவிகள் காலை, மாலை நேரத்தில் அவதி அடைகின்றனர். மழை பெய்தால் சாலையோரம் உள்ள வணிக நிறுவனங்களை தேடி ஓடும் நிலை உள்ளது. எனவே, இனிவரும் நாட்களை கருத்தில் கொண்டு தொலைநோக்கு திட்டத்துடன் கூடிய பஸ் நிலைய விரிவாக்க பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

பயணிகள் அவதி

கூடலூர் பஸ் நிலைய பகுதி திருவேங்கடம்:-

பஸ் நிலைய விரிவாக்க பணி நிறைவு பெறாததால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியூர் செல்லும் பயணிகள் உடைமைகளுடன் வெயிலில் காத்து நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அவர்களுக்கு தற்காலிகமாக நிழற்குடை கூட அமைக்கவில்லை. இதனால் நடைபாதை மற்றும் கடைகள் முன்பு கால்கடுக்க நிற்கின்றனர்.

இதேபோல் வெளிமாநில பயணிகளும் அவதிப்படுகின்றனர். இனி வரும் காலங்கள் பனி மற்றும் வெயில் காலநிலை என்பதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இல்லையெனில் அடுத்த ஆண்டு மழைக்காலம் தொடங்கி விட்டால், அனைவரும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.

கழிப்பறை வசதி

கூடலூர் காளம்புழா பாலன்:-

கூடலூரில் இருந்து கேரளா செல்வதற்கு அதிக பயணிகள் வருகை தருகின்றனர். பஸ் நிலைய விரிவாக்க பணி நடைபெறுவது வரவேற்கக் கூடியது. ஆனால், இன்னும் விரைவு படுத்தினால் நல்லது. வெளியூர்களிலிருந்து இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வரும் பயணிகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். மேலும் கூடலூரில் இருந்து காலை 5.45 மணிக்கு பஸ்கள் புறப்படுவதால் வெளியூர்களில் இருந்து இரவு-அதிகாலையில் வரும் பயணிகள் டீ குடிப்பதற்கு கூட வழியில்லை. இதனால் பஸ் நிலைய பகுதியில் இரவு நேர கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும்.

அடிப்படை வசதிகள்

கூடலூர் ராஜகோபாலபுரம் டேவிஸ்:-

விரிவாக்க பணிக்கு முன்பு கழிப்பறை வசதி இரவில் கிடையாது. இதனால் திறந்தவெளியை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. தற்போது கட்டுமான பணியும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் மிகவும் பயனற்ற நிலையில் இயக்கப்படுகிறது. இதற்கு பதிலாக தரமான பஸ்கள் இயக்க வேண்டும். மேலும் கூடலூரில் இருந்து புதிய வழித்தடங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் உடனடியாக செய்ய வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்