நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறப்பு விழா காண்பது எப்போது?

நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் திறப்பு விழா காண்பது எப்போது? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்;

Update:2022-09-27 04:41 IST

நெல்லை மாநகரின் இதயப்பகுதியாக விளங்கும் சந்திப்பு பஸ் நிலையம் பஸ்கள் போக்குவரத்து, பயணிகள் நடமாட்டம் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால் பஸ்நிலையம் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்ட பிறகு பஸ் நிறுத்தம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால், இந்த பகுதி முன்பு போல் இல்லை. நெல்லையின் பிற பகுதிகளில் இருந்து வரும் பயணிகள், அண்டை மாவட்டங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் என அனைவரும் தங்கள் ஊர்களுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள்

நெல்லை மாநகராட்சியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது. இதில் நெல்லை சந்திப்பு பஸ்நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் பாளையங்கோட்டை பஸ் நிலையத்தை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் நெல்லை புதிய பஸ்நிலையம் கூடுதல் பிளாட்பாரங்களுடன் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு விட்டது. பாளையங்கோட்டை பஸ் நிலையமும் முழுமையாக கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வந்து விட்டது.

ஆனால், ஒரே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பணி மட்டும் இன்னும் முழுமையாக நிறைவடையாமல் அரைகுறையாக நிற்கிறது. இதனால் 4 ஆண்டுகளாக இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.

5 தளங்களுடன் பஸ்நிலையம்

சந்திப்பு பஸ் நிலையம் 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமையான பஸ்நிலையம் ஆகும். இந்த பஸ் நிலையத்தை முழுமையாக இடித்து விட்டு, புதிதாக கட்டுவதற்காக ரூ.78.99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு பஸ் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பூமிக்கு அடியில் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு வசதியாக ஒரு தளம், பஸ்கள் நின்று செல்ல தரைத்தளம், அதற்கு மேல் கடைகள் செயல்படுவதற்கு என 3 தளங்கள் என 5 தளங்களுடன் பிரமாண்டமாக பஸ் நிலையத்தை கட்ட திட்டமிடப்பட்டது.

பணிகள் தாமதம்

பின்னர் பஸ்நிலைய பணிகள் தொடங்கி நடந்து வந்தாலும் இன்னும் முழுமை பெறவில்லை. பூமிக்கு அடியில் வாகன நிறுத்தம் கட்டுவதற்காக தோண்டியபோது மழைநீர் பெருகியதால் கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் ஒரு ஆண்டு கழித்து 2019-ம் ஆண்டுதான் பணி தொடங்கியது. பின்னர் பணிகள் வேகமாக நடைபெற்றது. பஸ் நிலையத்தின் கிழக்குப்பகுதியில் மட்டும் கட்டுமான பணி வேகமாக நடந்தது. இதில் கீழ் தளம், தரை தளம் மற்றும் 3 தளங்கள் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பஸ் நிலையத்தில் மொத்தம் 144 கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் ஒரு பகுதியில் குறிப்பிட்ட கடைகள் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அங்கு 17 பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு பிளாட்பாரமும் அமைக்கப்பட்டு தயாராக இருக்கிறது. கீழ்தளத்தில் ஒரே நேரத்தில் 106 கார்கள், 1,629 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தலாம். அந்த தளமும் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. 2 உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க அடிமட்ட தூண் கட்டப்பட்டு உள்ளது. ஆனால், அது மேலே உயராமல் இருக்கிறது. இதுதவிர மேலே உள்ள கடைகளுக்கு செல்ல 'லிப்ட்' வசதிகள் அமைக்கப்படுகிறது. டிஜிட்டல் திரைகள், கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது.

பயணிகள் கோரிக்கை

இதற்கிடையே, இந்த பஸ் நிலைய கட்டுமானம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருப்பதால், பணி முடங்கி கிடக்கிறது. இருந்தபோதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சந்திப்பு பஸ் நிலைய பணிகளை முழுமையாக முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து நெல்லை அருகே உள்ள அருகன்குளத்தை சேர்ந்த மாலதி கூறும்போது, 'நான் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறேன். சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படாததால் தினமும் எங்களது ஊரில் இருந்து உடையார்பட்டிக்கு வந்து அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் வருகிறேன். இதனால் சந்திப்பு பகுதிக்கு வந்து செல்ல சிரமமாக உள்ளது. எனவே, சந்திப்பு பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும்' என்றார்.

நெல்லையை சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், 'சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படாததால் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எஸ்.என். ஹைரோட்டில் கண் ஆஸ்பத்திரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. தற்போது சந்திப்பு பஸ் நிலையத்தில் ஒரு பகுதி பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டன. எனவே, கோர்ட்டு வழக்கை காரணம் காட்டி பஸ் நிலையத்தை திறப்பதை நிறுத்தி வைக்கக்கூடாது. பணி முடிந்த பகுதியை மட்டும் திறந்து அந்த வழியாக டவுன் பஸ்களை மட்டுமாவது முதலில் இயக்க வேண்டும். கோர்ட்டு வழக்கு பிரச்சினை முடிந்த பிறகு மற்ற பகுதி கட்டுமானத்தை முடித்து முழுமையாக செயல்படுத்த வேண்டும்' என்றார்.

சந்திப்பு பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் அனுபமா சுதாகர் கூறுகையில், '4 ஆண்டுகள் ஆகியும் சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணியை முடித்து திறக்கப்படாமல் கிடப்பதால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். வெளியூர்களில் இருந்து ரெயிலை பிடிக்க பஸ்களில் வரும் பயணிகள் ஆற்றுப்பாலம் அருகில் உள்ள பஸ் நிறுத்தங்களில் இறங்கி ரெயில் நிலையத்துக்கு மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு சிரமப்பட்டு செல்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதேபோல் ரெயிலில் இறங்கி வருவோரும் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே, சந்திப்பு பஸ்நிலைய கட்டுமான பணியை விரைந்து முடித்து திறக்க வேண்டும்' என்றார்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, 'சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணி தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து முடித்து, பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட பிறகு பஸ் நிலையம் திறக்கப்படும்' என்றனர்.

இருந்தபோதும், இந்த பஸ் நிலையம் திறப்பு விழா காண்பது எப்போது? என்று பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்