கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் எப்போது தொடங்குகிறது? அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தொடங்குகிறதா? அல்லது முதல் கூட்டம் நடைபெற்ற நாளில் இருந்து தொடங்குகிறதா? என்பது குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-04 18:50 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டன. ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரணமாக, உறுப்பினர் கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், இயக்குனர் தேர்தல் சில கூட்டுறவு சங்கங்களில் 10 முதல் 14 மாதங்கள் தாமதமாக நடந்தது.

இந்த நிலையில், கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகளின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைந்து விட்டதாகக்கூறி கூட்டுறவு சங்கங்களை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்டு மாதம் உத்தரவிட்டுள்ளது.

தள்ளுபடி

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், "நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியில் அமர்ந்த பிறகே பதவிக்காலம் அமலுக்கு வருவதால் வரும் 2024 வரை சங்க நடவடிக்கைகளில் தலையிடவும், கூட்டுறவு சங்கங்களை கலைக்கவும் தமிழ்நாடு அரசுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்தே பதவிக்காலம் தொடங்குவதாகக்கூறி அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட முதல் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

பதவி காலம்

அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இயக்குனர்கள் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே சங்க உறுப்பினர்களின் பதவிக்காலம் தொடங்கும். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூனில் முதல் கூட்டம் நடந்துள்ளதால் அதன்பிறகே சங்கத்தின் பதவிக்காலம் தொடங்கும். எனவே தங்களுக்கு வரும் 2024-ம் ஆண்டு ஜூன் வரை பதவிக்காலம் உள்ளது என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், "கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது என்பதால், அன்று முதல் பதவிக்காலம் தொடங்கி, 5 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது. அதன் காரணமாகவே அந்த சங்கங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று வாதிட்டார்.

பதில்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலம் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து தொடங்குகிறதா? அல்லது முதல் கூட்டம் நடைபெற்ற நாளில் இருந்து தொடங்குகிறதா? என்பது குறித்து அரசு பதிலளிக்க வேண்டும்.

அதுவரை கூட்டுறவு சங்கங்களுக்கு தனி அதிகாரிகள் நியமித்த உத்தரவு தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். விசாரணையை வரும் 31-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்