ஓடும் பஸ்சில் இருந்து கழன்று ஓடிய சக்கரம்: உயிர் தப்பிய பயணிகள்
கொள்ளிடம் அருகே ஓடும் பஸ்சில் இருந்து சக்கரம் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.;
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பயணிகளுடன் சென்ற அரசு டவுன் பஸ்சின் சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்த விவரம் வருமாறு:-
கொள்ளிடம் அருகே உள்ள வடரங்கம் கிராம பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பணிகளுக்கு கொள்ளிடம், புத்தூர், சிதம்பரம், சீர்காழி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அரசு டவுன் பஸ்களையே நம்பி செல்கின்றனர்.
இந்த நிலையில் சீர்காழி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று பகல் 12 மணி அளவில் அரசு டவுன் பஸ் புறப்பட்டு வடரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் அன்பழகன் இயக்கினார். பனங்காட்டங்குடி பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் மீண்டும் புறப்பட்டு வடரங்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 25 பயணிகள் இருந்தனர்.
பனங்காட்டங்குடி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக அரசு பஸ்சின் இடது புற முன் சக்கரம் கழன்று பஸ்சுக்கு முன்னே தனியாக சாலையில் 10 மீட்டர் தூரம் ஓடி சாய்ந்தது. இதனைக்கண்ட டிரைவர் அன்பழகன், மிக சாதுரியமாக சாலையோரம் கொண்டு சென்று நிறுத்தினார். பஸ்சில் இருந்த பயணிகளை கண்டக்டர் இங்கர்சால் பாதுகாப்பாக இறக்கி விட்டார். டிரைவரின் சாதுர்யத்தால் பயணிகள் உயிர் தப்பினர்.
விபத்து ஏற்படாமல் பஸ்சை நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய டிரைவர் அன்பழகனை அந்த பகுதி மக்கள் பெரிதும் பாராட்டினர். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.