விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
காரைக்குடி,
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கருத்தரங்கு
சிவகங்கை மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தோட்டக்கலை பயிர்களில் அங்கக வேளாண்மைக்கான கருத்தரங்கு, சாக்கோட்டை வட்டாரத்திற்கு உட்பட்ட அமராவதி புதூரில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் பேசியதாவது:- மாவட்டத்தில், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும், நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் அமராவதி புதூரில், தொழில்நுட்ப வல்லுனர்களை கொண்டு இயற்கை விவசாயம் குறித்தும், அதன் நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கின்ற வகையில் இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.
இயற்கை விவசாயத்தினை தரமான முறையில் மேற்கொள்ள வேண்டியதன் மூலம் மண், நீர் ஆகியற்றின் தன்மை மற்றும் தரத்தினை நாம் மேம்படுத்த முடியும். அதன்மூலம் நிலத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பல்வேறு உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். பஞ்சகாவியம், ஜீவாமிர்தம் போன்றவற்றை எவ்வாறு தயாரிப்பது? எவ்வாறு பயன்படுத்துவது? என்பது குறித்து நாம் முறையாக அறிந்து கொள்ள வேண்டும்.
மானியம்
பொதுமக்களின் தேவைகளை அறிந்து, பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, புதிய பொருட்களை உற்பத்தி செய்து, சந்தைபடுத்தி, அதன்மூலம் அதிக லாபம் ஈட்டலாம். சிறுதானியங்களை பயிரிட்டு, அதன் மூல பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி சந்தைப்படுத்தி அதன் மூலமும் பயன்பெறலாம். மேலும், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு குழுக்கள் அமைத்து, தரிசு நிலங்களை விளைநிலங்கள் ஆக்கும் நடவடிக்கையும் அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கான மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.
தேனீ பெட்டிகள், காளான் வளர்ப்பு போன்றவைகளுக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, உற்பத்தி பொருட்களுக்கு ஏற்ற, உரிய லாபத்தினை பெற்று பயன்பெறும் வகையில் இ-நாம் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பதிவு செய்து, அதன் மூலமும் பயன் பெறலாம். விவசாயிகள் இதை பயன்படுத்தி தங்களது வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவி
கருத்தரங்கில் 30 விவசாயிகளுக்கு ரூ.9.08 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். பின்னர் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், துறைரீதியான திட்ட விளக்க கையேட்டினை கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) சக்திவேல், உதவி இயக்குனர்கள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் அனைத்து வட்டார தோட்டக்கலைத்துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.