254 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

கூடலூரில் நடந்த ஜமாபந்தியில் 254 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 73 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.;

Update:2023-06-22 02:00 IST

கூடலூர்

கூடலூரில் நடந்த ஜமாபந்தியில் 254 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 73 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

ஜமாபந்தி

கூடலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று தொடங்கியது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது ஓவேலி பேரூராட்சி சூண்டியில் மூடப்பட்டு உள்ள அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். தொடர்ந்து உரிய ஆய்வு நடத்தி அங்கன்வாடி மையத்தை திறக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பின்னர் முதுமலை ஊராட்சியில் சாலை வசதி, ஸ்ரீமதுரை ஊராட்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் உள்ள நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா மற்றும் மின்சாரம் வழங்க வேண்டும் என மனுக்கள் அளிக்கப்பட்டது. தொடர்ந்து 110 மனுக்களை கலெக்டர் பெற்று, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து 16 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மின்னணு குடும்ப அட்டைகள், வருவாய்த்துறை சார்பில் 24 பேருக்கு முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு உதவித்தொகை ரூ.4.95 லட்சம் மதிப்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் பந்தலூர் பகுதியை சேர்ந்த கள்ளி சுய உதவிக்குழுவிற்கு ரூ.2.10 லட்சம் மதிப்பில் மிளகு தரம் பிரிக்கும் எந்திரம் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

தொடர்ந்து முதல்- அமைச்சரின் விரிவான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 213 நபர்களுக்கு ரூ.10 கோடியே 65 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் என மொத்தம் 254 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 73 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கலெக்டர் ஆய்வு

இதையடுத்து கூடலூர் தாலுகா அலுவலகத்தில் தேவர்சோலை, உள்வட்டத்திற்கு உட்பட்ட செறுமுள்ளி-1, செறுமுள்ளி-2, ஸ்ரீமதுரை, முதுமலை, நெலாக்கோட்டை (பெண்னை) ஆகிய கிராமங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் (கூடலூர்) கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா, கூடலூர் நகராட்சி ஆணையாளர் பிரான்சிஸ் ஜேவியர், கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, கூடலூர் தாசில்தார் சித்தராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வக்குமார், கூடலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, ஆறுமுகம் மற்றும் நில அளவை அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்