சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 134 பேருக்கு நலத்திட்ட உதவி
சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 134 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அடுக்கம்பாறை ஊராட்சி, மேட்டு இடையம்பட்டி கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். சப்- கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில், கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், மாவட்ட கவுன்சிலர் பாபு, ஊராட்சி துணை தலைவர் தென்போஸ்கோ, ஒன்றிய கவுன்சிலர் வேலாயுதம், வருவாய் ஆய்வாளர் உலகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் கணேசன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முகாமில் மொத்தம் 419 மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 134 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ரூ.8 லட்சத்து 72 ஆயிரத்து 883 மதிப்பிலான நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. 244 மனுக்கள் பரிசீலனையிலும், மீதமுள்ள 41 மனுக்கள் தள்ளுபடியும் செய்யப்பட்டது. முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நரசிம்மவர்மன், மண்டல துணை தாசில்தார் உதயகுமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.