பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
திருவள்ளூரில் பயனாளிகளுக்கு ரூ.1¾ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்.
திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று தமிழக அரசின் இரண்டாண்டு சாதனைகளை எடுத்துரைக்கும் வகையிலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 495 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டிலான இலவச வீட்டு மனை பட்டாக்கள் மற்றும் 100 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பீட்டிலான முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகள் என மொத்தம் 595 பயனாளிகளுக்கு ரூ.1.85 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.
விழாவில் திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி, திருத்தணி எம்.எல்.ஏ. எஸ்.சந்திரன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜெ.கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், சமூக பாதுகாப்பு திட்டம் தனித்துணை ஆட்சியர் சி.ப.மதுசூதனன், திருவள்ளூர் நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் காயத்ரி சுப்பிரமணியம், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின், உள்ளாட்சிப்பிரதிநிதிகள் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.