சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில் ரூ.57 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில் ரூ.57 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வழங்கினர்.
செங்கல்பட்டு,
614 பயனாளிகளுக்கு
செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை சார்பில், மாவட்ட கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களின் சார்பில் 614 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் எஸ்.சுரேஷ்குமார் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். காஞ்சீபுரம் தொகுதி எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரூ.57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில்
சிறப்பு விருந்தினர்களாக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் கலந்துக் கொண்டு ரூ.57 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, கருணாநிதி, அரவிந்த் ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, செங்கல்பட்டு நகராட்சி நகர மன்றத்தலைவர் தேன்மொழி, நரேந்திரன், துணை தலைவர் அன்புச்செல்வன், காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர்சந்தானம். செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லலிதா, செங்கல்பட்டு மாவட்ட முஸ்லிம் உதவும் சங்கசெயலாளர் முகம்மது பெய்க், கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க செயலாளர் லியோ டோம்னிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.