வார விடுமுறை - குற்றாலத்தில் குவிந்து வரும் சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் வாரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சாரல் மழை பொழிந்து குளுமையான சீசன் நிலவும். இந்த ரம்மியமான சூழலில் குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீரில் குளித்து மகிழுவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.
இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
இந்த நிலையில், தற்போது மழை குறைந்துள்ளதால், அருவிகளில் சீராக தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இன்று விடுமுறை தினம் என்பதால், குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் அருவிகளில் வாரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
தற்போது குற்றாலத்தில் ஐந்தருவி, மெயின் அருவி, படகு குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். மெல்லிய சாரல் மழைத்துளிகளுடன் குற்றாலத்தில் ரம்மியமான சூழல் நிலவி வரும் நிலையில், அங்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.