வார விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்,
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சீதோஷ்ணம் நிலவி வருவதால் மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
இன்று வார விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். நகர் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.