வனப்பகுதியில் களை செடிகளை அகற்றும் பணி

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் வளர்ந்துள்ள களை செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது

Update: 2022-07-01 14:46 GMT

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் வளர்ந்துள்ள களை செடிகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் புதிதாக மரக்கன்றுகள் நடப்பட உள்ளன.

களை செடிகளை அகற்றும் பணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது.

இந்த காப்பகத்தில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரக பகுதிகள் உள்ளன. இங்கு புலி, சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்பட பல வனவிலங்குகள் உள்ளன. அதுபோன்று ஏராளமான மரங்கள், செடிகளும் உள்ளன.

குறிப்பாக இந்த புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் மின்மினி பூச்சிகள் அதிகளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு புகைப்படங்களும் வெளியானது.

இது வன ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் அன்னிய தாவரங்கள் (களை செடிகள்) அதிகளவில் உள்ளன.

அவற்றை அப்புறப்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும், கோவை மண்டல வனபாதுகாவலருமான ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-

250 ஏக்கர்

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் லாண்டனா என்று அழைக்கப்படும் உன்னிச்செடிகள், சீமை கருவேல மரங்கள் உள்பட 3 வகையான அன்னிய தாவரங்கள் 250-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ளது.

இந்த செடிகள் மற்ற செடிகள் மற்றும் புற்களை வளர விடாமல் தடுக்கிறது. எனவே அவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டு தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த செடிகளை அகற்றிய பின்னர் அங்கு வேம்பு, புங்கம், நெல்லி, நாவல் உள்ளிட்ட நமது நாட்டை சேர்ந்த ரக மரக்கன்றுகளும், அந்த இடத்தில் அதிகமாக வளரக்கூடிய செடி வகைகளும், மான்கள், வரையாடுகள் விரும்பி சாப்பிடும் புல்வகைகளும் நடப்படும். இந்த பணிகள் அனைத்தும் 1½¹ மாதங்களுக்குள் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உன்னிச்செடிகள்

மேலும் இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, கோவை கோட்ட வனப்பகுதியிலும் உன்னிச்செடிகள் உள்ளிட்ட அன்னிய செடிகள் அதிகமாக காணப்படுகிறது. இந்த செடிகளை அகற்றும் பணியும் விரைவில் தொடங்கி, அங்கு நமது நாட்டு வகையை சேர்ந்த மரக்கன்றுகள் நடப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்