தூத்துக்குடியில் இருந்து புதன்கிழமை கப்பல் மூலம் இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்படுகிறது

தூத்துக்குடியில் இருந்து புதன்கிழமை கப்பல் மூலம் இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்

Update: 2022-06-21 16:14 GMT

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் இன்று (புதன்கிழமை) நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், கீதாஜீவன் ஆகியோர் நேற்று நிவாரண பொருட்களை ஆய்வு செய்தனர்.

நிவாரண பொருட்கள்

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அங்கு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் 10 ஆயிரம் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 30 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும,் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

15 ஆயிரம் டன்

இதனை தொடர்ந்து 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து இலங்கைக்கு அனுப்புவதற்காக 30 ஆயிரம் டன் அரிசி தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டு தனியார் குடோனில் வைத்து பொட்டலமிடும் பணி நடந்து வந்தது.

அதே போன்று 250 டன் எடையுள்ள பால்பவுடர், சுமார் 50 டன் எடையுள்ள மருந்து பொருட்களும் கொண்டு வரப்பட்டு, அனைத்தும் முறையாக பொட்டலமிடப்பட்டு உள்ளன.

இந்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நிவாரண பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்துக்கு புறப்பட்டு செல்கிறது. இந்த கப்பலில் 14 ஆயிரத்து 700 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் ஏற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மொத்தம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பல் புறப்பட்டு செல்கிறது.

இன்று

இந்த கப்பலை அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு கொடியசைத்து அனுப்பி வைக்கின்றனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள அரிசி உள்ளிட்ட இதர பொருட்கள் அடுத்த சில தினங்களில் மற்றொரு கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த பணிகளை நேற்று மாலையில் அமைச்சர்கள் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், கீதாஜீவன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை விரைந்து முடிக்கவும், தரமான பொருட்கள் அனுப்பப்படுகிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்