மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கலை உற்சாகமாக கொண்டாடிய விவசாயிகள்-பொட்டிரெட்டிப்பட்டியில் கோவிலை சுற்றிவந்த காளைகள்

Update:2023-01-17 00:15 IST

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் முழுவதும் மாட்டுப்பொங்கலை உற்சாகமாக விவசாயிகள் கொண்டாடினர். இதையொட்டி பொட்டிரெட்டிப்பட்டியில் கோவிலை காளைகள் மூலம் சுற்றி கொண்டு வரப்பட்டன.

மாட்டுப்பொங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அனைத்து வீடுகளிலும் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் மாட்டுப்பொங்கல் விழாவை கொண்டாடினர்.

இதையொட்டி மாடுகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, வர்ணம் பூசி அலங்கரித்தனர். பின்னர் அவைகளுக்கு இலையில் பொங்கல் வைத்து மாடு தெப்பம் விடும் நிகழ்ச்சி நடத்தினர். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கினர். இந்த நிகழ்வு கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் கிராமபுறங்களில் உற்சாகமாக நடத்தப்பட்டது.

கோவிலை சுற்றி வந்த காளைகள்

நாமக்கல் அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியில் மாட்டுபொங்கலை கொண்டாடும் விவசாயிகள் மற்றும் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் இறுதியாக அங்குள்ள மாரியம்மன், கருப்பண்ணார் மற்றும் விநாயகர் கோவிலை காளைகளுடன் சுற்றி வந்து சாமிதரிசனம் செய்வார்கள்.

அந்த வகையில் நேற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காளைகளுடன் கோவிலை சுற்றி வந்து, சாமிதரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்் மாட்டுப்பொங்கலையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் செய்திகள்