கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-06-24 18:49 GMT

காரைக்குடி, 

கண்ணதாசன் பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ரகுபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கண்ணதாசன் பிறந்த நாள் விழா

கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்த ஆண்டு 96-வது பிறந்த நாள் விழா காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன் பின்னர் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு விழா

கவிஞர் கண்ணதாசன் கலை மற்றும் சினிமா துறையில் மிகுந்த பற்றுதல் கொண்டு செயல்பட்டதால் அனைவராலும் போற்றப்பட்டவர். இதுதவிர அரசியலில் அவர் கால் பதித்து பொதுமக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடுவதற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டு தற்போது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதேபோல் கண்ணதாசனிற்கு புகழ் சேர்க்கும் வகையில் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்தையும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நிறுவினார். இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் இந்த மணிமண்டபத்தில் நூலகம் அமைந்துள்ளது. இதுதவிர பல்வேறு அரசு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் இந்த மணிமண்டபத்தில் நடத்தப்படுவது கண்ணதாசனுக்கு மேலும் புகழை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், தாசில்தார் மாணிக்கவாசகம், மாங்குடி எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத்தலைவர் குணசேகரன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் டாக்டர் கே.ஆர்.ஆனந்த், தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில் குமார்,கண்ணதாசன் மகள் விசாலாட்சி, அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், கோட்டையூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் டாக்டர் ஆனந்தன், தி.மு.க மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் கவிஞர் அரு.நாகப்பன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நாகராஜ பூபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்