மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; பாலகிருஷ்ணன் பேட்டி

மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.

Update: 2023-06-28 18:45 GMT

சங்கரன்கோவில்:

மதச்சார்பற்ற கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.

பேட்டி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ்நிலையம் அருகே உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

மத்திய பிரதேசத்தில் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். பொது சிவில் சட்டத்தை மதச்சார்பற்ற அணிகள் சிறுபான்மை வாக்கு வங்கிக்காகத்தான் எதிர்ப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால் இந்துக்களின் வாக்கு வங்கிகளை கருத்தில் கொண்டு தான் பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை கொண்டு வருகிறார். பா.ஜ.க. ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை அடக்க நினைக்கிறது. இந்த பாசிச போக்கினை கண்டித்து இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்துவோம்.

தி.மு.க. எம்.பி.க்கு கண்டனம்

தமிழக அரசுக்கு போதுமான நிதி உதவியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. ஆனால் மத்திய அரசு மட்டும் மின்கட்டண உயர்வை உயர்த்தியுள்ளது. அம்மா உணவகங்களுக்கு தமிழக அரசு கூடுதல் நிதி அளிக்க வேண்டும். தமிழக ஆளுநர் தற்போது டெல்லி சென்றுள்ளார். மீண்டும் வரும்போது தமிழக அரசின் ஆட்சியை கலைப்பார் என்ற அ.தி.மு.க.வின் கனவு ஒருபோதும் நடக்காது. அப்படி பார்த்தால் பா.ஜ.க. ஆளும் மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளுக்கு முதலில் மணிப்பூரில் தான் ஆட்சியை கலைக்க வேண்டும்.

தென்னிந்திய திருச்சபையில் குழப்பத்தை உருவாக்க நினைத்ததாக நெல்லை தி.மு.க. எம்.பி. மீது 5 பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினருக்கு திருச்சபையில் என்ன வேலை? தி.மு.க. உறுப்பினரின் இந்த செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தென்காசி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், சங்கரன்கோவில் தாலுகா செயலாளர் அசோக் ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்