மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்

தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்

Update: 2022-11-23 23:15 GMT

தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில மாநாடு

நெல்லையில் ஏ.ஐ.டி.யு.சி. மாநில மாநாடு வருகிற டிசம்பர் 1, 2, 3 ஆகிய தேதிகளில் நடக்கிறது. மத்திய அரசு தொழிலாளிகளின் உரிமைகளை பறிக்கும் வகையில், தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கியதைக் கண்டித்தும், அந்த சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

காசி வாரணாசியில் பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்று கூறினார். இதனை வரவேற்கிறேன். எனினும் மற்ற மொழிகளைவிட தமிழ் மொழிக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது.

அதேபோன்று பாரதியார் மீசையை முறுக்கி வைத்தது காசியில்தான் என்றும் பிரதமர் கூறினார். ஆனால் சாதிகள் இல்லை என்று கூறி பாரதியார் தனது பூணூலை அறுத்ததும் காசியில்தான் என்பதை பற்றி பிரதமர் பேசவில்லை.

கவர்னரை திரும்ப பெற...

தமிழகத்தில் கவர்னர் ஒரு மதத்திற்கு ஆதரவாகவே பேசி வருகிறார். திருக்குறள் உலக பொதுமறை நூலாகும். ஆனால் அதனை இந்து மதத்தின் நூல் என்று கூறுகிறார். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை உள்ளிட்ட 20 தீர்மானங்களுக்கு கவர்னர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, அடுத்த மாதம் (டிசம்பர்) 29-ந்தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து வருகிற 26-ந்தேதி கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.

மக்கள் பிரச்சினைகளுக்காக...

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களில் நிரந்தர தொழிலாளர்களுக்கு பதிலாக, அவுட் சோர்சிங் முறையில் தொழிலாளர்களை நியமிப்பதற்கு முதன் முதலாக நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போன்றோரின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும்.

களக்காடு பகுதியில் கரடியை கொன்று புதைத்ததாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை அரசு வாபஸ் பெற வேண்டும். தி.மு.க. கூட்டணியில் தொடர்ந்தாலும், மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்