அசுர பலம் கொண்ட தி.மு.க.வை எதிர்க்க வலிமையான வேட்பாளர் வேண்டும் -அண்ணாமலை பேட்டி

அசுர பலம் கொண்ட தி.மு.க.வை எதிர்க்க வலிமையான வேட்பாளர் வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2023-02-01 22:27 GMT

மீனம்பாக்கம்,

இலங்கையில் 13-வது சட்டத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும் என்பது தமிழக பா.ஜ.க.வின் நீண்ட கால கோரிக்கை ஆகும். தற்போது இலங்கை சூழல் மாறி கொண்டு இருக்கிறது. வடகிழக்கு பகுதியில் உள்ள தலைவர்கள், தமிழர்கள் 13-வது அட்டவணையில் உள்ள போலீஸ், வருவாய் ஆகிய 2 அதிகாரங்களை தரவேண்டும் என கேட்டு கொண்டு உள்ளனர்.

இலங்கை சென்றபோது ரணில் விக்கரம சிங்கேவை இந்திய வெளியுறவு துறை மந்திரி சந்தித்து விட்டு வந்தார். வெளியுறவு மந்திரியை சந்தித்து இலங்கையில் வருவாய், போலீஸ் அதிகாரத்துடன் கூடிய 13-வது அட்டவணையை விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க. சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம்.

வலிமையான வேட்பாளர்

ஈரோடு இடைத்தேர்தல் எங்களுக்கான தேர்தல் இல்லை. அசுர பலம், பண பலம், படை பலம், ஆள் பலம் எல்லாவற்றுக்கும் மேலாக அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்த கூடிய தி.மு.க.வை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் ஒரு வலிமையான வேட்பாளர் வேண்டும். இன்னும் 2 நாட்களில் நாங்கள் சொல்லும் வரை பொறுமையாக இருங்கள்.

கூட்டணி பெயரை ஏன் மாற்றினார்கள்? என்பதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும். காலையில் இருந்த கூட்டணி பெயர் 6 மணி நேரத்தில் எப்படி மாறியது என்பது தெரியவில்லை?. அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் என்னிடம் பேசும் போது பிரிண்டிங் பிழை என்றார்கள். மோடி படம் இல்லை என்பதை பேனர் வைத்தவர்களிடம்தான் கேட்க வேண்டும். நிறைய பேர் களத்தில் வேட்பாளர்களை நிறுத்துகின்றனர். கட்சியின் அதிகாரப்பூர்வ பதில் விரைவில் சொல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்