'தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்' கவர்னர் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி பதில்

தமிழ்நாட்டை எப்படி அழைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என்று, கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதில் அளித்துள்ளார்.

Update: 2023-01-07 17:05 GMT

கையுந்து பந்து போட்டி

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாநகராட்சி உள் விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம் சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான அமர்வு கையுந்து பந்து விளையாட்டுப் போட்டி நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ஜி.ராஜன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, தலைவர் கிளாடி, செயலாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக யூடியூபர் ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 150 பேர் பங்கேற்கின்றனர்.

இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். மேலும் போட்டிகளில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் இலவச வீடு ஆகியவை கட்டித்தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழ்நாடு

பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக கவர்னர் தமிழ்நாடு என சொல்லக்கூடாது, தமிழகம் என்று சொல்ல வேண்டும் என கூறுகிறார். தமிழகத்தை எப்படி அழைக்க வேண்டும் என்பது நமக்கு தெரியும். தமிழகம் என்பதற்கும், தமிழ்நாடு என்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் தமிழ்நாடு என்பது தான் நம்முடைய நாடு. தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப் என பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்களும் இந்தியர்கள் தான். தமிழர்களும் இந்தியர்கள் தான். அனைவரும் சேர்ந்ததுதான் இந்தியா. இதனால் தான் இந்தியாவை வேற்றுமையில் ஒற்றுமை என மகாத்மா காந்தி தெரிவித்தார்.

இவையெல்லாம் கவர்னருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. கவர்னர் இவ்வாறு கூறிவிட்டார் என்பதற்காக நாம் கொதிப்படைய வேண்டாம். நாம் கொதிப்படைய வேண்டும் என்பதற்காகவே இந்த கவர்னர் அனுப்பப்பட்டுள்ளார். என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொங்கல் பண்டிகை

இந்துக்களின் திருவிழாக்களுக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து சொல்வாரா? என பா.ஜ.க.வினர் கேட்டுள்ளனர். தமிழர் திருநாள் என்று சொல்லக்கூடிய பொங்கல் தமிழர் பண்டிகை, இந்து பண்டிகை தானே. இதற்கு வாழ்த்து சொல்கிறோம் அல்லவா.

பா.ஜ.க.வினர் தமிழர் பண்டிகையை பொங்கல் பண்டிகையாக கருதவில்லையா?. பொங்கல் பண்டிகை வெளிநாட்டு கலாசாரத்தில் இருந்து வந்ததா?. பொங்கல் என்பது இந்து கலாசாரத்தில் இருந்து வந்தது தான். இந்து மதத்தில் தான் நாம் இருக்கிறோம். நாம் தான் இந்து.

பா.ஜ.க.வினர் கூறுவது கலவரத்தை உண்டாக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் தமிழ் கலாசாரத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு கலாசாரத்தில் உள்ளனர். கலாசார வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

கமல்ஹாசன், ராகுல்காந்தி சந்திப்பு வரவேற்கக்கூடிய ஒன்று. கமல்ஹாசன் தேசிய உணர்வுடைய தலைவர். நல்ல மனம் படைத்தவர். சீர்திருத்த கருத்துகளை உடையவர். இன்றைய நிலையில் ராகுல்காந்தி போன்ற தலைவர் தான் இந்தியா போன்ற தேசத்திற்கு தலைமை ஏற்க முடியும் என உறுதியாக நம்புகிறார். அதனுடைய வெளிப்பாடு தான் அவருடன் அவர் நடை பயணம் மேற்கொண்டார். அவரோடு கருத்து பரிமாற்றத்தையும் செய்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று குடியாத்தத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வெற்றிபெறும்

ராகுல் காந்தி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கினார். இதன் தொடர்ச்சியா தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் நூறு இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது.

கொள்கை ரீதியாக அகில இந்திய அளவில் கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி தலைமை தாங்குகிறது. தமிழகத்தில் கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குகிறது. இந்த கூட்டணி வலுவாக உள்ளது. நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கடந்த தேர்தலைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

கண்டனத்துக்கு உரியது

ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் மக்கள் நீதி மையத்தில் தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி. அவர் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறோம். வாரிசு அரசியலை கொண்டு வந்ததே காங்கிரஸ்தான் என அமித்ஷா கூறியுள்ளார். அவரது மகன் கட்சிக்காக சிறை செல்லவில்லை. எந்த தியாகமும் செய்யவில்லை. ஆனால் அதிகார மையத்தின் முக்கிய புள்ளியாக உள்ளார்.

ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் கவர்னர் கையெழுத்திடாதது மிகவும் கண்டனத்திற்குரியது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்