முதல் கணவரின் மகளை திருமணம் செய்து வைக்க கூறியதால் வெங்காய வியாபாரியை கொன்றோம்; மனைவி பரபரப்பு வாக்குமூலம்

முதல் கணவரின் மகளை திருமணம் செய்து வைக்க கூறியதால் வெங்காய வியாபாரியை கொன்றோம் என்று மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

Update: 2023-07-02 19:51 GMT

சோமரசம்பேட்டை:

வெங்காய வியாபாரி

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள வாசன்வேலி 10-வது குறுக்கு வீதியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 44). வெங்காய வியாபாரியான இவருக்கும், மதுரை மேலூரை சேர்ந்த தனலட்சுமி(36) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டு, தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சிவலிங்கம் தினமும் மது குடித்துவிட்டு வந்து தனலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் வழக்கம்போல் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தனலட்சுமி, தனது உறவினரான செந்தில்குமாருக்கு(40) தகவல் தெரிவித்து, அவரது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

கொலை

இதையடுத்து சிவலிங்கத்துக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இரும்பு கம்பியால் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும் அவர்கள் சிவலிங்கத்தை ெகாலை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து அவர்கள், தனலட்சுமியின் உறவினரான ஆறுமுகம்(55), அவரது மனைவி சுமதி(42) ஆகியோர் உதவியுடன், சிவலிங்கத்தின் உடலை பெட்ரோல் ஊற்றி எரிக்க மணப்பாறை பகுதிக்கு ஒரு வேனில் கொண்டு சென்றுள்ளனர்.

நவலூர் பகுதியில் சென்றபோது, அவர்கள் ராம்ஜிநகர் போலீசாரிடம் சிக்கினர். இதில் செந்தில்குமார் தப்பியோடிவிட்டார். இதையடுத்து மற்ற 3 பேரையும் போலீசார் பிடித்தனர். இது குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

வாக்குமூலம்

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரிடம் தனலட்சுமி வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-

நான் மதுரை மேலூரை சேர்ந்த எனது உறவினர் பிரபு என்பவரை முறைப்படி திருமணம் செய்து வாழ்ந்து வந்தேன். எங்களுக்கு 14 வயதில் மகள் உள்ளார். எனக்கும், எனது கணவர் பிரபுவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் நான் எனது மகளை மதுரை மேலூரில் உள்ள ஒரு விடுதியில் சேர்த்தேன். மேலும் பிழைப்புக்காக எனது உறவினரான திருச்சி கருமண்டபத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவரது வெங்காய கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.

கொடுமைப்படுத்தினார்

அப்போது அங்கு வெங்காய வியாபாரம் செய்த சிவலிங்கத்துடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்து, தனி வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம். எங்களுக்கு 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் எனது 2-வது கணவரான சிவலிங்கம் தினமும் குடித்துவிட்டு வந்து என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இது பற்றி நான் எனது உறவினர் செந்தில்குமாரிடம் கூறினேன். எனக்கு அவர் ஆறுதல் கூறி வந்தார். இதனால் எனக்கும், செந்தில்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. மேலும் நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தோம். இந்நிலையில் சிவலிங்கம், விடுதியில் உள்ள எனது மகளை அழைத்து வந்து தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும், என்னை விபசாரத்தில் ஈடுபடவும் கூறினார். மேலும் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து கொடுமைப்படுத்தினார். இது பற்றி செந்தில்குமாரிடம் தெரிவித்தேன். இதையடுத்து நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அவரை அடித்தேன். பின்னர் 2 பேரும் சேர்ந்து, கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம்.

பெட்ரோல் வாங்கிக்கொண்டு...

பின்னர் இந்த கொலையை மறைக்க, சிவலிங்கத்தின் உடலை சாக்கால் மூடி இரும்பு கம்பியால் சுற்றினோம். மேலும் இது பற்றி எனது உறவினர் ஆறுமுகம், அவரது மனைவி சுமதி ஆகியோருக்கு தெரிவித்தேன். இதையடுத்து அவர்கள் உதவியுடன் ஒரு வேனில் பிணத்தை ஏற்றிக்கொண்டு, அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு சென்றோம். அங்கு ஒரு கேனில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு, மணப்பாறை நோக்கி சென்றோம். அப்போது நவலூர் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் அருகே சென்றபோது, அங்கு வந்த போலீசார் எங்களை பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தப்பி ஓடிய செந்தில்குமாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்