இயற்கையோடு இணைந்து இருந்த வாழ்வில் இருந்து விலகி விட்டோம் -ஐகோர்ட்டு வேதனை
இயற்கையோடு இணைந்து இருந்த வாழ்வில் இருந்து விலகி விட்டோம் ஐகோர்ட்டு வேதனை.
சென்னை,
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரையொட்டி அமைந்துள்ள அணைபாளையம் ஏரியில் இயல்பு அளவுக்கு அதிகமாக தண்ணீர் வந்தால், சந்திரசேகரபுரம் கிராமத்தில் நீர் புகுந்து விடுவதால், ஏரியில் கூடுதல் நீரை திறந்துவிட உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்த கிராமவாசிகளுக்கு பட்டா வழங்கும்போது நீர்பிடிப்புக்கு தடை ஏற்படுத்த கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக கட்டுமான பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
நீர்நிலைகளை, நீர் வழித்தடங்களை குடியிருப்புகளுக்காக வகைமாற்றம் செய்ய அனுமதித்ததால்தான், தற்போது அதற்கு பெரிய விலையை கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இயற்கையோடு இணைந்த வாழ்வில் இருந்து நாம் விலகி விட்டோம்.
இந்த வழக்கில் ஏரியில் இருந்து கூடுதல் நீரை திறந்துவிட மறுத்து ஆர்.டி.ஓ. பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீர்நிலைகள், நீர்பிடிப்பு பகுதிகள், நீர் வழித்தடங்களை ரியல் எஸ்டேட்களாக மாற்ற அனுமதிக்காமல் ஆரம்ப நிலையிலேயே அதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.