பொங்கல் செலவுக்காக சந்தன மரங்களை வெட்டி விற்றோம்

பொங்கல் செலவுக்காக சந்தன மரங்களை வெட்டி விற்றோம்

Update: 2023-01-14 18:45 GMT

கோவை

கோவையில் பொங்கல் செலவுக்காக சந்தன மரங்களை வெட்டி விற்றோம் என்று கைதான 5 பேர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

சந்தன மரம் கடத்தல்

கோவை ரேஸ்கோர்சில் உள்ள கலெக்டர் பங்களா, திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலை ஊழியர்கள் குடியிருப்பு, சாய்பாபாகாலனி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிக்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, நாகராஜ், சின்னதுரை மற்றும் ஏட்டுகள் கார்த்தி, பூபதி, செந்தில் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

5 பேர் கைது

மேலும் இந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திச்சென்ற ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார் (வயது 39), தாளவாடி உமையுன் ஷேக் (70), முகம அலிஜின்னா (30), திருப்பூரை சேர்ந்த செந்தில் (38), பிஸ்டர் (29) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம், மோட்டார் சைக்கிள், அரிவாள், கத்தி, ரம்பம் உள்ளிட்ட ஆயுதங்கள், சந்தன மரத்துண்டு உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான 5 பேரும் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

பொங்கல் செலவு

கைதான 5 பேரும் பகல் நேரத்தில் இளநீர் மற்றும் பழங்களை விற்பனை செய்வதுபோன்று மொபட்டில் கண்காணித்து வந்து உள்ளனர். எந்தெந்த பகுதியில் நன்றாக வளர்ந்த சந்தன மரங்கள் இருக்கிறது என்பதை நோட்டமிட்டு வைத்துக்கொண்டு, இரவு நேரத்தில் 5 பேரும் அங்கு சென்று சத்தம் இல்லாமல் அவற்றை வெட்டி கடத்தி உள்ளனர்.

கோவையில் தொடர்ந்து 3 இடங்களில் நடந்த சம்பவத்திலும் இதுபோன்றுதான் இரவு நேரத்தில் 3 மணி நேரம் காத்திருந்து அவற்றை வெட்டி கடத்திச்சென்று உள்ளனர். அதில் 30 கிலோ சந்தன கட்டைகளை ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்து, 5 பேரும் சமமாக பிரித்து உள்ளனர். இந்த சந்தனை மரங்களை பொங்கல் செலவுக்காக கடத்தியதாக கூறி உள்ளனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்