தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம் - அண்ணாமலை பேட்டி

தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2024-06-05 11:33 GMT

சென்னை,

சென்னை பா.ஜ.க. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய அளவில் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைக்க உள்ளார். மூன்றாவது முறை ஆட்சிக்கு வருவது கடினம்; அதை முறியடித்து பா.ஜ.க. சாதித்துள்ளது. தமிழகத்தில் மிகக் கடுமையாக உழைத்தோம். ஆனாலும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தில் இருந்து எம்.பிக்களை மக்களவைக்கு அனுப்ப இயலவில்லை.

தமிழக மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு மூலம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்துள்ளோம். சில இடங்களில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றியை இழந்துள்ளது. தவறு எங்கு நேர்ந்தது என்பதை ஆராய்ந்து அடுத்த முறை சரி செய்வோம்.

கோவை மக்களவைத் தொகுதியில் பணம் கொடுக்காமல் எனக்கு 4 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. திராவிட கட்சிகளின் தோளில் பயணிக்காமல் தனித்து நின்று பா.ஜ.க. வளர்கிறது. நேர்மையான அரசியலை முன்னெடுக்க உள்ளோம். தமிழகத்தில் 2026-ல் பா.ஜ.க ஆட்சி என்பதே எங்களது இலக்கு. இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணிக்கு வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்