நாம் தமிழர் கட்சியுடன் பிற கட்சியினர்கூட்டணிக்கு வருவார்கள்
நாங்கள் முன்வைக்கும் மாற்று அரசியல் மக்களிடம் செல்வாக்கு பெரும்போது நாம் தமிழர் கட்சியுடன் பிற கட்சியினர் கூட்டணிக்கு வருவார்கள் என்று வேலூரில் சீமான் தெரிவித்தார்.
வேலூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியினருடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வரிகளால் மக்கள் அவதி
தேர்தல் வரும்போது தி.மு.க. அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு இந்த சோதனையை நடத்தி இருக்கலாம். 4 மாதத்தில் தேர்தல் வரப்போகிறது. அதற்காக நெருக்கடி கொடுக்கிறார்கள். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பச்சை தமிழன் என்று சொல்கிறார் என்கிறீர்கள். அவர் தமிழன் தான். ஆனால் அவர் தான், கர்நாடகா மாநிலத்தில் இருக்கும்பொழுது நான் கன்னட மொழி பேசுவதற்கு மிகப் பெருமை கொள்கிறேன் என்றார். நான் எங்கு சென்றாலும் தமிழன் என்று கூறுவேன். சூழ்நிலைக்கு ஏற்ப பேச மாட்டேன்.
புதிய கல்விக்கொள்கை ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை கொண்டது. அந்த சித்தாந்தத்தை மாணவர்கள் படிப்பில் திணிக்கிறார்கள். மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. மற்றும் சாலை வரி, சுங்கச்சாவடி கட்டணம் போன்றவற்றால் மக்கள் மிகுந்த அவதிப்படுகின்றனர்.
எல்லாவற்றுக்கும் நீதிமன்றமா?
ஜி.எஸ்.டி.யால் இந்த நாடு வளர்ந்தது எவ்வளவு?. நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மந்திரி படித்ததுண்டா?. வரி, வரி என்று மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள். 10 ஆண்டுகளில் சாதித்ததை பிரதமர் சொல்ல முடியுமா?. ஸ்வைப் மெஷின் வைத்து பிச்சை எடுப்பது அல்ல வளர்ச்சி. பிச்சைக்காரர்கள் இல்லாமல் இருப்பது தான் வளர்ச்சி. ஒரு சட்டம், ஒரு திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதா?. அனைத்து பிரச்சினைகளுக்கும் நீதிமன்றம் என்றால் நாடாளுமன்றம் எதற்கு?. பல்லாங்குழி விளையாடவா?
வார்டு கவுன்சிலருக்கு வரிசையில் நின்று வாக்களிக்கிறோம். ஆனால் குடியரசு தலைவரை மக்கள் தேர்ந்தெடுக்க முடியாது. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் குடியரசு தலைவரை தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
மாற்று அரசியல்
காவிரியில் தண்ணீர் வாங்கித்தர முடியவில்லை. எப்படி மீண்டும் வந்து தமிழகத்தில் ஓட்டு கேட்பீர்கள். மதுரையில் எய்ம்ஸ் அமைப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு செங்கல்லை வைத்து விட்டு போய் விட்டார்கள். நாங்கள் முன்வைக்கும் மாற்று அரசியல் மக்கள் மத்தியில் செல்வாக்குபெறும்போது பிற கட்சியினர் எங்களுடன் கூட்டணிக்கு வருவார்கள்.
நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால் ஜெயிலர் படத்திற்கு ஏன் நெருக்கடி இல்லை. இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களுக்கு இதுபோன்ற நெருக்கடி இல்லை. இதனால்தான் எங்களுக்கு சந்தேகம் வருகிறது. சினிமாத்துறை என்பது தற்பொழுது கார்பரேட் கையில் அடங்கியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.