வருமான வரித்துறை சோதனையை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம்

வருமான வரித்துறை சோதனையை கண்டு நாங்கள் பயப்படமாட்டோம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.

Update: 2023-04-25 18:19 GMT

புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ``கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட கிராமப்புறங்களில், நகரப்பகுதிகளில் தேவைகள் அதிகமாக உள்ளது. இருக்கிற நிதியை வைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் கிராமப்புறங்களில் சாலைகள் சரியாக போடப்படவில்லை. கடந்த 2006-2011-ல் எப்படி சாலைகளை அமைத்து தந்தோமோ அவ்வாறு கிராமத்தில் உட்புற சாலைகள் அமைத்து தரப்படும். வருமான வரித்துறையினர் சோதனை என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக செய்கின்றனர். எங்களுக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என முதல்-அமைச்சரும், மற்றவர்களும் தெளிவுப்படுத்தி உள்ளனர். இருந்தாலும் எங்களது எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை என்பது பயமுறுத்தும் செயலாக ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இதற்கெல்லாம் பயப்படமாட்டோம். தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மூலம் எடுத்த நடவடிக்கைகள் உள்பட சில கோப்புகள் வழக்குபோடுவதற்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டன. அதற்கு கவர்னர் இன்னும் எந்த அனுமதியும் தரவில்லை. அதனால் புதிய வழிகளில் வழக்குகள் போடுவது தொடர்பாக சட்டவல்லுனர்களுடன் கலந்து பேசி வேறு வழியில் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். 9 மத்திய சிறைகளில் கைதிகளுக்கிடையே விளையாட்டு போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இதில் யாரெல்லாம் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்து அவர்களை ஒருங்கிணைத்து கோப்பைகள் யாருக்கு என்பது உறுதி செய்யப்படும். அண்ணா பிறந்தநாளையொட்டி சிறை கைதிகள் 315 பேரை விடுதலை செய்ய கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் சிலரை விடுதலை செய்வதற்கான கோப்புகள் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் சட்டம் இயற்றப்பட்டு விட்டது. இனி சட்டம் தன் கடமையை செய்யும்''. இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்