வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, நாளை புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது.;
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தண்ணீர் திறக்கப்படுகிறது.
வரட்டுப்பள்ளம் அணை
அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை அமைந்து உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.48 அடி ஆகும். பர்கூர் மலையில் உள்ள தாளக்கரை, தாமரைக்கரை பகுதியில் பெய்யும் மழை நீரானது கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம், கும்பரவாணிப்பள்ளம் வழியாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வருகிறது.
இந்த அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு மற்றும் கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூர் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நாளை தண்ணீர் திறப்பு
இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டு உள்ளது.
அதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் செயலாளர் சந்திப் சக்சேனா பிறப்பித்து உள்ளார். அதன்படி வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.
2,924 ஏக்கர்
நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையில் 32.78 அடிக்கு தண்ணீர் இருந்தது. அணைக்கு நீர்வரத்தும், அணையில் இருந்து நீர் வெளியேற்றமும் இல்லை.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், '5-ந் தேதி (அதாவது நாளை) திறக்கப்படும் தண்ணீரானது வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி வரை 108 நாட்கள் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 2 ஆயிரத்து 924 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்,' என்றனர்.