குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
கூடலூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது.;
கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை, பண்ணைபுரம் ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்பில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. லோயர்கேம்பில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு குழாய்கள் மூலமாக மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்தநிலையில் கூடலூர்-லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலையில் எம்.ஜி.ஆர். காலனி அருகே கடந்த 3 நாட்களுக்கு முன்பு கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. அந்த தண்ணீர் சாலையில் ஆறு போல் ஓடுகிறது. மேலும் சாலையில் குடிநீர் குளம்போல் தேங்கி வீணாகி வருகிறது. இதனால் கோம்பை, பண்ணைபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரி செய்து, பொதுமக்களுக்கு குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.