ஏரி, குளங்களை எட்டிப்பார்க்காத தண்ணீர்

சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஏரி, குளங்களை தண்ணீர் எட்டிப்பார்க்காததால் ஏரி பாசன சாகுபடியும் கைவிட்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update:2023-10-26 02:22 IST

சேதுபாவாசத்திரம்:

கடைமடை பகுதி

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை ஆண்டு தோறும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த ஜூன் 12-ந்தேதி திறக்கப்பட்டது.

இதனால் சேதுபாவாசத்திரம் கடைமடை பகுதியில் ஆடிப்பட்டம் சம்பா சாகுபடியை தொடங்கி விடலாம் என்ற மகிழ்ச்சியில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் மேட்டூர் அணை திறந்து 4 மாதங்களாகியும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

வறண்டு கிடக்கும் ஏரி, குளங்கள்

இதற்கிடையில் .5 நாட்கள் வீதம் முறைவைத்து தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.அதுவும் ஏட்டளவில் வெளியிட்ட அறிவிப்பாகவே போய்விட்டது. முறையாக தண்ணீர் கிடைக்காததால் இன்னும் நாற்றுவிடும் பணிகளை கூடதொடங்கவில்லை. இதே நிலை நீடித்தால் இந்தாண்டு சம்பா சாகுபடி நடைபெறுவது சந்தேகமே.

கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கடைமடை பகுதியில் பருவ மழை பொய்த்து விட்டது. இதனால் கடைமடையில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் தரக்கூடிய ஊமத்தநாடு, விளங்குளம், சோலைக்காடு, பெருமகளூர், ரெட்டவயல், கொரட்டூர், பள்ளத்தூர், நாடியம் போன்ற பகுதிகளில் உள்ள பெரிய ஏரிகளும், 500-க்கும் மேற்பட்ட சிறு, சிறு குளங்களும் வறண்டு கிடக்கின்றன.

ஏரிகளை தண்ணீர் எட்டிப்பார்க்கவில்லை

வழக்கமாக மேட்டூர் அணை திறந்தால் கடைமடையில் மழை பெய்யும், அப்போது மழைநீரோடு மேட்டூர் தண்ணீரும் சேர்ந்து ஏரிகளில் நீர் நிரம்பி காணப்படும். ஆனால் இந்தாண்டு இதுவரை மேட்டூர் தண்ணீர் ஏரிகளை எட்டிப்பார்க்கவில்லை.

ஏரிகளுக்கு செல்லும் அளவிற்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. மழையும் பொய்த்து விட்டது.தற்போது தான் கடைமடையில் பரவலாக மழை பெய்து நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்றியது.

நாற்றுவிடும் பணி கூட தொடங்கவில்லை

ஏரிகள் நிரம்பினால்தான் தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டத்தை காப்பாற்றமுடியும். மேட்டூர் அணையை நம்பி பலனில்லை மழை பெய்தால்தான் ஏரிகள் நிரம்பும்.

இதுவரை சம்பா சாகுபடிக்கு நாற்றுவிடும் பணிகள் கூட தொடங்கவில்லை. ஏரிகளை மேட்டூர் தண்ணீர் எட்டி பார்க்காததால் ஏரி பாசன சாகுபடியும் கைவிட்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்