மழை ஓய்ந்தும் வடியாத தண்ணீர்

சிதம்பரத்தில் மழை ஓய்ந்தும் தண்ணீர் வடியாததால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர்

Update: 2022-11-14 18:45 GMT

சிதம்பரம்

வீடுகளை சூழ்ந்த மழைநீர்

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. வங்கக்கடலில் கடந்த 10-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை அடுத்து தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்தது. சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 12-ந் தேதி அடைமழை பெய்தது. அதாவது ஒரே நாளில் 31 சென்டி மீட்டர் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதியில் குளம்போல தேங்கியது. குறிப்பாக இந்திரா நகர், உசுப்பூர், மகாவீர் நகர், ஏ பிளாக், விளாந்திர மேடு, வாசகி நகர், பொன்னம்பலம் நகர், முருகேசன் நகர், ஜோசப் நகர், நடராஜா கார்டன் உள்ளிட்ட பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.

மழை ஓய்ந்தும் வடியவில்லை

சிதம்பரம் பகுதியில் நேற்று முன்தினமும், நேற்றும் மழை இல்லை. இருப்பினும் வீடுகளை சூழ்ந்துள்ள தண்ணீர் வடியவில்லை. மழை ஓய்ந்தும் தண்ணீர் வடியாததால் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், அவசரத்துக்கும் வீட்டை விட்டு வெளியே வந்து செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவிக்கிறார்கள்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் 2 நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆனால் அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ நேரில் வந்து ஆய்வு செய்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எங்களின் மன வேதனையை உணர்ந்து குடியிருப்புகளை சுற்றி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்