நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிரொலி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்-சாலைகள் துண்டிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-10-20 18:45 GMT

பாலக்கோடு:

கனமழை எதிரொலியாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதுடன், பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி மற்றும் வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த 3 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

4 ஏரிகளில் உடைப்பு

இதன் காரணமாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தை அடுத்த எச்.செட்டிஅள்ளி அருகே உள்ள அருள் ஏரி, குட்டூர் அருகே உள்ள ராயல் ஆச்சாரி ஏரி மற்றும் 2 சிறிய ஏரிகள் கனமழை காரணமாக நிரம்பின.

இதனால் அவற்றில் இருந்து உபரிநீர் சின்னாற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனிடையே அந்த பகுதியில் மீண்டும் கனமழை பெய்ததால் 4 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் 4 ஏரிகளின் கரைகளிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரிகளில் இருந்து வெளியேறிய தண்ணீர் சின்னாற்றில் சீறிப்பாய்ந்து சென்றது.

வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி

இந்த தண்ணீர் நேற்று பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை வந்தடைந்தது. மழை காரணமாக ஏற்கனவே சின்னாறு அணை நிரம்பியதால், அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் 3 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது. அதன்படி பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 58 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்ட்டது.

அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த தண்ணீர் பாலக்கோடு அருகே பொப்படி பகுதியில் தொல்லகாது ஆற்றில் கலந்தது. இதனால் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொல்லகாது ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செந்நிறத்தில் தொல்லகாது ஆற்றில் சீறிப்பாய்ந்த தண்ணீரை பாறைகளில் நின்றவாறு பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

சாலை துண்டிப்பு

இதனிடையே தொல்லகாது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் சின்னாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் சனத்குமார் நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 17 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த வெள்ளப்பெருக்கால் மாரண்டஅள்ளி-தேன்கனிக்கோட்டை சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் பஞ்சப்பள்ளி பகுதியிலும் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் கிராம மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் பாலக்கோடு அருகே ஆத்துக்கொட்டாய், கரகூர், அத்திமுட்லு, பன்னிபட்டி, சாஸ்திரமுட்லு மற்றும் சின்னாறு கரையோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

எச்சரிக்கை

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தொடர்ச்சியாக அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால், ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி வருகிறார்கள்.

மேலும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் ஒலிப்பெருக்கி மூலமும் வெள்ளப்பெருக்கு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்