சாலை போட்டதால் குடம் வைக்க முடியாத நிலை; மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட அடிகுழாய்
சாலை போட்டதால் குடம் வைக்க முடியாத நிலையில் மீண்டும் அந்த அடிகுழாய் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.;
பழனி 7-வது வார்டு கீழ வடம்போக்கி தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி சார்பில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. அப்போது சாலையோரம் இருந்த பொது அடிகுழாயுடன் சேர்த்து சாலை அமைக்கப்பட்டது. இதனால் அடிகுழாயின் உயரம் குறைந்து போனது. இதனால் குடம் உள்ளிட்ட எவ்வித பாத்திரமும் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை பார்த்த பலரும் அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த பதிவுகள் வேகமாக வைரலானது. மேலும் இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி'யிலும் வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த அடிகுழாயில் புதிதாக கம்பி பொருத்தப்பட்டு, சாலையில் இருந்து மேலே உயரம் அதிகரிக்கப்பட்டது.
மேலும் அடிகுழாய் பகுதியும் சரிசெய்யப்பட்டது. இதற்கிடையே நேற்று நகராட்சி ஆணையர் கமலா, பொறியாளர் வெற்றிசெல்வி ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர். அடிகுழாய் சரிசெய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.